இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபைக்கு ஐ.சி.சி. ‘மிதமான பதில்’

1 Min Read

கடந்த வார இறுதியில் அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி.) காலாண்டுக் கூட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதிகள் அழைக்கப்படாதபோதும், இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால சபைக்கு எதிராக எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.

இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால சபை கடந்த மே மாதம் விளையாட்டுத் துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டது. முன்னதாக 2023 மற்றும் 2015 இல் இவ்வாறான இடைக்கால சபைகள் நியமிக்கப்பட்டபோது அந்த இரு சந்தர்ப்பங்களும் அரச தலையீடாகவே அதனை ஐ.சி.சி. கருதியது.

எனினும் கடந்த மே மாதம் உண்மையை கண்டறியும் வகையில் ஐ.சி.சி. பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா இலங்கை வருகை தந்திருந்தார். இதனையடுத்தே புதிய நடவடிக்கையை ஐ.சி.சி. அரச தலையீடாக அறிவிக்கவில்லை என்பதோடு அண்மைய கூட்டத்திலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘இதுவரை எந்த செய்தியும் வராததே நல்ல செய்திதான்’ என்று இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபை உறுப்பினர் ஒருவர் கிரிக்கின்போ இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார். கடைசியாக 2023 இல் அரச தலையீடு எனக் கூறிய இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சி. இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக இருந்த ஷம்மி சில்வா மற்றும் நிர்வாகக் குழு இராஜினாமா செய்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு எரான் விக்ரமரத்ன தலைமையிலான இடைக்கால சபை ஒன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்கால ஐ.சி.சி. கூட்டங்களுக்கு இடைக்கால சபைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அந்தக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *