இலங்கை கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தில் ஆறு பிரிவுகளில் மொத்தம் 46 வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு அண்மைக் காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரவும் இதில் இடம்பிடித்துள்ளார்.
நுவன் துஷார தம்மை தேசிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கும்படி முன்னர் கோரி இருந்தார். இந்நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இதில் அதிரடி மாற்றமாக சுழல் வீரர் துஷான் ஹேமன்த 2026–27 ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தில் இடம்பெற்ற ஹேமன்த வீரர்கள் ஒப்பந்தத்தில் 55 பேர் கொண்ட ஆரம்பப் பட்டியலில் இடம்பெற்றபோதும் இறுதிப் பட்டியலில் இடம்பெறத் தவறியுள்ளார்.
எனினும் 2023 தொடக்கம் இலங்கை தேசிய அணியில் இடம்பெறாது இருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோசன் திக்வெல்ல தேசிய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஆரம்பத்தில் பரிசீலனையில் இருந்த பல வீரர்களும் ஒப்பந்த வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களில் சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க, இளம் சுழல் வீரர்; டிரவீன் மத்தியூ, மற்றொரு சுழல் வீரரான நிஷான் பீரிஸ் மற்றும் டெஸ்ட் ஆரம்ப வீரர் ஓஷத பெர்னாண்டோ அகியோரும் இடம்பெறவில்லை.
இந்த ஒப்பந்த வீரர்கள் ஏ1, ஏ2, பி1, பி2, சி1 மற்றும் மத்திய ஒப்பந்தம் என ஆறு பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் உச்ச தரத்தில் வருடாந்தம் 130,000 அமெரிக்க டொலர் தொடக்கம் கீழ் நிலை தரத்தில் 10,000 டொலர் வரை பிரிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணித்தலைவர் குசல் மெண்டிஸ், முன்னணி ஆரம்ப வீரர் பெத்தும் நிசங்க மற்றும் சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோர் இந்த ஓப்பந்தத்தில் முதல்நிலை வீரர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பல வளர்ந்துவரும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பவன் ரத்னாயக்க, வனுஜ சஹன், மொஹமட் ஷிராஸ், இசித்த விஜேசுந்தர மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் 12 மாத ஒப்பந்தத்தில் உள்ளனர்.



