இளையோர் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு இரு தங்கம்

2 Min Read

ஹொங்கொங்கில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கையால் இரு தங்கப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

நேற்று (31) முடிவுக்கு வந்த இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (30) பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் ரன்சினி பெரேரா போட்டித் தூரத்தை 24.07 விநாடிகளில் நிறைவு செய்து முதல் இடத்தைப் பெற்றார். இதில் சீனாவின் சங்லின் சூ மற்றும் இந்தியாவின் ஆர்தி ஆர்தி ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் சதீவ ராஜகருணா போட்டித் தூரத்தை 21.13 விநாடிகளில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பெற்றார். இதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஹமது அலி 20.85 விநாடிகளில் முதலிடத்தை வென்றதோடு சீனாவின் ஜின்சின் சென் (12.12 விநாடி) இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

அதேபோன்று கடந்த சனிக்கிழமை (30) நடைபெற்ற ஆண்களுக்காக உயரம் பாய்தல் போட்டியில் தரூஷ திசாநாயக்க 2.14 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் பசன்ட் பசன்ட் 2.20 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து தங்கத்தை வென்றார். பெண்களுக்கான உயரம் பாய்தலில் தெமலப்பெரும கன்கானம்லாகே வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக போட்டியின் முதன் நாளான கடந்த வியாழக்கிழமை (28) நடைபெற்ற பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி அபிசேக்கா தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் போட்டித் தூரத்தை 4:31.41 நிமிடங்களில் நிறைவு செய்தே முதல் இடத்தைப் பெற்றார். இதில் ஈரானின் மர்யம் பலவ்டாக்கி இரண்டாம் இடத்தையும் தென் கொரியாவின் சொங் டவுசன் மூன்றாம் இடத்தையும் வென்றனர். எனினும் நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தரூஷி பங்கேற்றதோடு அதில் அவரால் வெண்கலப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது. இதன்போது அவர் போட்டித் தூரத்தை 2:09.10 நிமிடங்களில் நிறைவு செய்தார். போட்டியை 2:05.44 நிமிடங்களில் நிறைவு செய்த ஜப்பானின் ஹனோன் சசாக்கி தங்கப் பதக்கத்தை வென்றதோடு சீனாவின் யுவான் டெங் (2:05.70) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியும்இறுதி நாளான நேற்று இடம்பெற்றது. இதில் இலங்கை சார்பில் பங்கேற்ற தினெத் லியனகே 1:49.22 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்படத்தக்கது. இந்தியாவின் வென்கடராமன் ரெட்டி போட்டியை 1:48.27 நிமிடங்களில் நிறைவு செய்து தங்கத்தை வென்றார்.

44 நாடுகள் பங்கேற்ற இளையோர் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை சார்பில் 15 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் என மொத்தம் 22 பேர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *