மத்திய கென்யாவில் உள்ள கில்கில் நகரில் அமைந்துள்ள உதுமிஷி பெண்கள் பாடசாலை விடுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 16 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 79 மாணவிகள் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் நைரோபியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகூரு மாகாணத்தின் கில்கில் நகரில் இப்பாடசாலை அமைந்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு மாணவிகள் அனைவரும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ மிக வேகமாக பரவியதால், விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதில் சிக்கி 16 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 79 மாணவிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கென்ய கல்வி அமைச்சர் ஜுலியஸ் ஒகாம்பா கூறுகையில்:
“இந்த விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 79 பேர் காயமடைந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் ஏற்பட்ட பயம் மற்றும் பதற்றம் காரணமாக பல மாணவிகள் இருட்டில் வெளியே ஓடித் தப்பியுள்ளனர். அவ்வாறு சிதறி ஓடிய மாணவிகளை தேடும் பணியில் 50க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி மசூத் முவின்யி தெரிவித்துள்ளார். சி.என்.என்



