ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே மீண்டும் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் வெடித்துள்ளன. இந்த புதிய மோதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கியுள்ளதுடன், உலகளாவிய மசகு எண்ணெய் சந்தையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹொர்முஸ் நீரிணைப் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் 4 தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அத்துடன், தெற்கு ஈரானின் மூலோபாய துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) அருகே இருந்த ஈரானிய இராணுவக் கட்டுப்பாட்டு நிலையத்தையும் குண்டுவீசி அழித்தது. இது முற்றிலும் “தற்காப்பு நடவடிக்கை” என அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அப்பகுதியில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகளைத் தாங்கள் இடைமறித்து அழித்ததாக அமெரிக்காவின் கூட்டாளியான குவைத் அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஈரான் தனது பிரமாண்டமான ஏவுகணைக் கிடங்குகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான இந்த திடீர் மோதலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரே நாளில் 2.5% உயர்ந்து ஒரு பரல் 96.63 டொலராக விற்பனையாகிறது. டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் விலை 90.93 டொலராக அதிகரித்துள்ளது. உலகில் நுகரப்படும் மசகு எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த ஹொர்மூஸ் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையால் ஆயிரக்கணக்கான சரக்குக் கப்பல்கள் நடுவழியில் முடங்கியுள்ளன. இந்த பதற்றத்தால் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹொர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியதுடன், அதற்குத் துணைபோகும் அண்டை நாடான ஓமனுக்கும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஓமன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் அந்த நாட்டையும் குண்டுவைத்து தகர்ப்போம்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு ஈரானிய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தங்களின் “சகோதர நாடான ஓமனுடன்” ஈரான் உறுதியாகத் துணை நிற்கும் என்றும் அறிவித்துள்ளது.
மறுபுறம், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடன் இஸ்ரேல் நடத்தி வரும் போரும் தீவிரமடைந்துள்ளது. லெபனானின் தெற்குப் பகுதியான டயர் மற்றும் சிதோன் ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 20 வயது இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 16-ல் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பிறகு இதுவரை 11 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை நீக்கினால் மட்டுமே ஹொர்முஸ் நீரிணையைத் திறப்போம் என்ற ஈரானின் நிபந்தனையை வெள்ளை மாளிகை முற்றிலும் நிராகரித்துள்ளது. அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை என்றும், ஈரான் தங்களின் நிபந்தனைகளுக்குப் பணியவில்லை எனில் “வேலையை முழுமையாக முடிப்போம்” (அதாவது முழுமையான போரைத் தொடங்குவோம்) என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் புதிய ஆன்மிகத் தலைவர் அயத்தொல்லா மொஜ்தபா கமனெய், “அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் மரணம்” என்ற தங்களின் புரட்சிகரக் கொள்கையில் உறுதியாக இருப்பதால், இந்த பிராந்தியத்தில் தற்காலிகமாக அமைதி திரும்புவது சாத்தியமில்லை என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.



