ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 1% இனால் அதிகரிக்க முடிவு: 8.75%

3 Min Read

இலங்கை மத்திய வங்கி அதன் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 1% இனால் அதிகரித்து 8.75% ஆக பேண முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75% இலிருந்து 1% இனால் (100 அடிப்படைப் புள்ளிகளால் – bps) அதிகரிக்க நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது.

உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் மாறிவரும் பொருளாதார சூழல்களையும் கண்ணோட்டத்தையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரே சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்களால் எழும் நிச்சயமற்ற தன்மைகள், உலகளாவிய பண்டங்களின் விலைகள், குறிப்பாக பெற்றோலியத்தின் விலைகள் உயர்வானதாக இருக்கக் காரணமாக அமைந்துள்ளன. இது உலகப் பொருளாதாரத்தையும் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் பாதகமான வகையில் பாதிக்கிறது.

உயர்ந்த உலகளாவிய எரிபொருள் விலைகள், உள்நாட்டு வலுசக்தி விலைகளில் கூர்மையான மேல்நோக்கிய அதிகரிப்பை அவசியமாக்கியுள்ளன. இது ஏப்ரல் 2026 இல் ஏற்பட்ட 5.4% (வருடாந்த) பணவீக்கத்திற்குப் பெருமளவில் பங்களித்துள்ளது.

சமீபத்திய பணவீக்க அதிகரிப்பானது பெரும்பாலும் விநியோகத்தைச் சார்ந்ததாக இருந்தாலும், தொடர்ச்சியான கடன் விரிவாக்கம், கடன் சார்ந்த இறக்குமதிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான முன்னணி குறிகாட்டிகள் காட்டுவது போல, பொருளாதாரத்தில் தேவை நிலைகளும் வலுப்பெற்றுள்ளன. அதன்படி, ஒட்டுமொத்தப் பணவீக்கம், எதிர்வரும் காலத்தில் 5% எனும் இலக்கிற்கு மேல் நீடிக்க வாய்ப்புள்ளது. பின்னர் அது குறைவடைந்து, அந்த இலக்கைச் சுற்றி நிலைபெறுமென, மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.

குறுகிய காலத்திற்கான பணவீக்க எதிர்பார்ப்புகளும் ஓரளவு அதிகரித்துள்ள போதிலும் அவை நடுத்தர காலத்திற்கான பணவீக்க இலக்கைச் சுற்றியே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதலால் உருவாகும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், வெளித்துறையில் (external sector) குறுகிய கால அழுத்தங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊக வணிக நடவடிக்கைகள் (Speculative activity – உறுதியான எதிர்கால இலாபத்தை நம்பி, அதிக ஆபத்துள்ள சொத்துகளில் குறுகிய கால முதலீடு செய்யும் செயல்) காரணமாக அண்மைய வாரங்களில் அத்தகைய அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

2025இல் பதிவு செய்யப்பட்ட வலுவான செயல்திறனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நடப்புக் கணக்கில் உள்ள உபரி மிதமானதாகவே இருந்தது. எரிபொருள் இறக்குமதிக்கான அதிகரித்த செலவினம் மற்றும் சுற்றுலா வருவாயில் ஏற்பட்ட மந்தநிலை ஆகியவற்றால் ஏற்பட்ட, விரிவடைந்து வரும் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், 2026இல் இதுவரை தொழிலாளர்களின் பணவரவுகள் வலுவாகவே இருந்து வருகின்றன. வெளிநாட்டுக் கடன் சேவைகளுக்கு மத்தியில், 2026 ஏப்ரல் மாத இறுதியில் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

பல பிராந்திய நாணயங்களைப் போலவே, இலங்கை ரூபாவும் அண்மைய வாரங்களில் குறிப்பிடத்தக்க மதிப்பு வீழ்ச்சி அழுத்தங்களைச் சந்தித்தது, இருப்பினும் அதன் பின்னர் நிலைமைகள் ஓரளவிற்குத் தணிந்துள்ளன. வரும் காலங்களில், எதிர்பார்க்கப்படும் கணிசமான பல்தரப்பு நிதிவரவுகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் தணியும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளித்துறையின் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்ந்த பணவீக்க முன்னறிவிப்பின் அடிப்படையில், வலுசக்தி விலை மாற்றங்களால் ஒட்டுமொத்த பணவீக்கத்தில் ஏற்படக்கூடிய இரண்டாம் சுற்று விளைவுகள், இறக்குமதித் தேவையைத் தூண்டும் தனியார் துறை கடனின் தொடர்ச்சியான விரிவாக்கம், வெளித்துறை மீதான அழுத்தங்கள், பணவீக்க எதிர்பார்ப்புகள் நிலை குலைவதற்கான அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தச் சூழ்நிலையில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இறுக்கமாக்குவது பொருத்தமானது என இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கருதியதன் அடிப்படையில் மேற்படி ஓரிரவுக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைப்பாடு, உள்நாட்டு விலை நிலைத்தன்மையைப் பேணுவதில் சபையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியானது, உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் பெறும் தரவுகளையும், உருவாகிவரும் அபாயங்களையும் கவனமாக மதிப்பீடு செய்து, பணவீக்கம் அதன் இலக்கைச் சுற்றி நிலைபெறுவதை உறுதி செய்வதற்கும், அதேவேளையில், நடுத்தர காலத்தில் பொருளாதாரம் அதன் முழுத் திறனை எட்டுவதற்கு ஆதரவளிப்பதற்கும், பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்குமென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாணயக் கொள்கை மீளாய்வு குறித்த வழக்கமான அடுத்த அறிக்கை 2026 ஜூலை 22 வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *