நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரம், பிரபல சுற்றுலாத்தளமாக உள்ளது.
இந்த சிகரம் சுமார் 29,000 அடி உயரமுள்ளது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான இங்கு மலையேற்றம் செய்து வருகின்றனர்.
ஆனால், உயரம் செல்ல செல்ல கடுமையான பனி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இதில் உள்ளது. பனிச்சரிவு, கீழே விழுதல், உடல்நலப்பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், முதல்முறையாக இரு கால்களை இழந்த நபர், செயற்கை கால்களை பொருத்தாமல், கைகளை பயன்படுத்தி எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
2 கால்கள் இல்லாமலே எவெரெஸ்ட்டில் ஏறி சாதனை
ரஷ்யா வான்படை வீரரான ருஸ்தம் நபீவ் கடந்த 2015 ஆம் ஆண்டில், ராணுவ முகாமில் உறங்கிக் கொண்டிருந்தபோது முகாம் இடிந்து விழுந்ததில், தனது இரு கால்களையும் இழந்தார்.

ஆனால், இதை காரணமாக வைத்து அவர் முடங்கிவிடவில்லை. செல்வாக்குமிக்க வலைப்பதிவராகவும், உடற்பயிற்சியாளராகவும் மாறினார்.
மேலும், உயரமான சிகரங்களில் ஏறி, வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுதாரணமாக மாறினார்.
2020 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான எல்ப்ரஸ் மலையில் ஏறினார்.
அதைத்தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் மனாஸ்லு மலை, கிளிமஞ்சாரோ மற்றும் கஸ்பெக் மலைகளிலும், மேலும் 2022 ஆம் ஆண்டில் தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவாவிலும் ஏறியுள்ளார்.
இந்நிலையில், உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட்டில் ஏற முயற்சித்த அவர், மே 20 ஆம் திகதி நேபாள நேரப்படி காலை 8:16 மணிக்கு எவெரெஸ்ட் சிகர உச்சியை அடைந்தார்.
இதன் மூலம், இரு கால்களை இழந்து, செயற்கை உறுப்புகள் இல்லாமல் உலகின் மிக உயரமான மலைச்சிகரத்தில் ஏறிய முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
எவெரெஸ்ட் உச்சியில் இருந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வீழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தவர்களுக்கு. ருஸ்தம் நபீவ், எவரெஸ்ட் 2026” என தெரிவித்துள்ளார்.



