‘ஹஜ் குழு’, ‘ஹஜ் நிதியம்’ விவகாரத்தில் மாற்றம் அவசியம்!

4 Min Read

முஸ்லிம் சமூகத்தின் புனித கடமையான ஹஜ் யாத்திரை ஆரம்பமாகியுள்ள சூழலில், இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களின் நலன்கள் மற்றும் ஹஜ் நிதியத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஹஜ் குழுவின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் நிதி கையாளல் விவகாரங்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு சட்ட ரீதியான தீர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

தொடரும் சர்ச்சைகளும் விமர்சனங்களும்

இம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3500 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமைக்காக சவுதி அரேபியா செல்கின்றனர். எனினும், ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலப்பகுதியில் எழும் பேசா விசா மற்றும் ஹஜ் முகவர்கள் மற்றும் ஹஜ் குழு தொடர்பான விமர்சனங்கள் இம்முறையும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் பேசுபொருளாகியுள்ளன.

அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம் மற்றும் ஹஜ் குழு ஆகியன பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், சில விடயங்கள் சமூகம் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

சவுதி அரசினால் இலவசமாக வழங்கப்படும் பேசா விசாக்களை பகிர்வதில் பாரபட்சம் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழு உறுப்பினர்களின் மனைவியரை இலவச விசா ஊடாக புனித பயணத்திற்கு அனுப்பும் முடிவு தொடர்பில் கடும் எதிர்ப்பு தலைதூக்கியுள்ளது. அத்தோடு முறையான கணக்காய்வு (Audit) இன்றி ஹஜ் நிதியத்திலுள்ள பல கோடி ரூபா பணம் பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் கேள்வி எழும்பியுள்ளது.

பேசா விசா விவகாரமும் அரசியல் தலையீடும்

கடந்த காலங்களில் சவுதி அரசினால் 100-க்கும் மேற்பட்ட இலவச விசாக்கள் வழங்கப்பட்ட போதிலும், அரசியல் முறைகேடுகள் காரணமாக அந்த எண்ணிக்கை 35 ஆகக் குறைந்துள்ளது. கடந்த காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களின் கட்சி ஆதரவாளர்களுக்கும் பேசா விசாவில் பெரும் பகுதி ஒதுக்கப்பட்டதாலே இவ்வாறான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது. இம்முறை வழங்கப்பட்ட 35 பேசா விசாக்களில் 18 முகவர்களுக்கும், மீதமுள்ளவை முஸ்லிம் சமய கலாசாராத் திணைக்களம், ஹஜ் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஹஜ் குழு உறுப்பினர்கள் இருவரின் மனைவிமார்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறு ஹஜ் குழு உறுப்பினர்களின் மனைவிமார் பேசா விசாவில் சென்றுள்ளதாக சிலர் இதனை நியாயப்படுத்துகின்றனர். இது சலுகை அல்ல கொள்கை முடிவு என ஹஜ் குழு விளக்கமளித்துள்ள போதும் விமர்சனங்களில் உள்ள நியாத்தை புறந்தள்ள முடியாது.

கணக்காய்வு செய்யப்படாத ‘ஹஜ் நிதியம்’

யாத்திரிகர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ஹஜ் நிதியத்தில் தற்போது பல கோடி ரூபா உள்ளது. ஒவ்வொரு யாத்திரிகரும் வைப்பிலிடும் 5000 ரூபா மூலம் வருடாந்தம் சுமார் 17.5 மில்லியன் ரூபா இந்த நிதியத்திற்கு கிடைக்கிறது. இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முறையான சட்ட விதிகளோ அல்லது வரையறைகளோ தற்போது நடைமுறையில் இல்லை.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் தலா 3000 டொலர் வரை இந்த நிதியிலிருந்து பெற்றுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட 08 திணைக்கள அதிகாரிகளுக்கும் ஹஜ் குழு தலைவர் உள்ளிட்ட 03 உறுப்பினர்களுக்கும் தலா 1000 டொலர் ( 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா) வழங்கப்பட்டுள்ளதாக திணைக்கள தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2015-19 காலப்பகுதியில் 100 றியால்கள் ஹஜ் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அறிய வருகிறது.

இந்த நிலையில் யாத்திரிகர்களின் பணத்தை, அந்த குழுவில் இருப்பவர்களே தமக்கான சலுகைகளாக மாற்றிக்கொள்வது தார்மீக ரீதியாக எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.

அத்தோடு நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்தவும் நினைத்தவாறு செலவு செய்யவும் நிதியத்தின் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சட்ட ரீதியான தீர்வின் அவசியம்

2015-2019 காலப்பகுதியில் ஹஜ் நிதியத்திற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றங்களினால் அது கிடப்பில் போடப்பட்டது. இந்த சட்ட வெற்றிடமே தற்போதைய அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களுக்கும் தவறுகளுக்கும் மூல காரணமாக உள்ளதாக ஹஜ் குழுவுடன் தொடர்புள்ள முன்னாள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேசா விசா தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் ஹஜ் குழு மற்றும் ஹஜ் நிதியத்திலுள்ள நிதி நினைத்தவாறு பயன்படுத்தப்படுவது தொடர்பிலான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்து ஹஜ் கடமை நிறைவடைவதோடு மறக்கடிக்கப்பட்டு விடும். ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட சட்ட வரைபில் ஹஜ் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாகவும் ஹஜ் நிதியை எவ்வாறு கையாளலாம் என்பதற்கான வரையறை குறித்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. திணைக்களத்தின் ஊடாக உத்தியோகபூர்வ பணிக்குச் செல்லும் அதிகாரிகளுக்கு அரச நிதியின் ஊடாக நிதி வழங்க முடியும் என்பதால் எதிர்காலத்தில் ஹஜ் நிதியின் ஊடாக அவர்களுக்கு பணம் வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஹஜ் நிதியிலுள்ள பணம் வெளிப்படைத்தன்மையுடன் யாத்திரிகர்களினதும் முஸ்லிம்களினதும் நலன் சார்ந்த விடயங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தேவையான மாற்றங்களை செய்வது காலத்தின் தேவையாகும்.

புதிய அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு

இலங்கையில் சகல துறைகளிலும் வெளிப்படைத்தன்மையையும் மாற்றத்தையும் கொண்டுவர ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே நிதியத்தைப் பயன்படுத்துவது மற்றும் கணக்காய்வு செய்வது குறித்த புதிய சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும்.அத்தோடு கடந்த காலங்களில் ஹஜ் நிதியிலிருந்து செலவு செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் அரச கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஹஜ் குழு நியமனங்கள் மற்றும் பேசா விசா பகிர்வு ஆகியவற்றில் அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமய கலாசார அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், சமய கலாசார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் இந்த விவகாரங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுத்து, அடுத்த வருட ஹஜ் பயணத்தை எவ்வித சர்ச்சைகளும் இன்றி முன்னெடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் எதிர்பார்ப்பாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *