இலங்கையில் டின் (TIN – Taxpayer Identification Number) எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தின் அவசியம் தற்போது பரவலாக வலியுறுத்தப்படுகின்றது/ இம்மாதம் 30ஆம் திகதிக்கு மன்னராக 18 வயதைப் பூரத்தி செய்த அனைவரும் டின் இலக்கத்தைப் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டின் இலக்கத்தைப் பெறுவதற்கான ஆரம்ப காலக்கெடு 2024 ஏப்ரல் 1ஆம் திகதியாக இருந்தது. அதன் பின்னர் அதற்கான காலக்கெடுவோ சட்டநடவடிக்கைகளோ அறிவிக்கப்பட்டிராத போதும் எமது அத்தியாவசிய சேவைகள் பலவற்றைப் பெற டின் இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதனைப் பெறுவது அத்தியாவசியமானதாகின்றது.
டின் (TIN) இலக்கம் என்றால் என்ன? ஏன் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்ற விபரம் இன்னமும் பலருக்குத் தெரியவில்லை. இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் ஒரு தனித்துவமான இலக்கமே ‘TIN’ ஆகும். தற்போதைய சட்டதிட்டங்களின்படி, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த இலக்கத்தைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வரியேய்ப்புகளைத் (Tax Evasion) தடுத்து நாட்டின் வரித் தளத்தை விரிவுபடுத்தவும் அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஒருவர் நேரடியாக வரி செலுத்தும் மட்டத்திலான வருமானத்தைக் கொண்டிருக்காவிட்டாலும், பின்வரும் முக்கிய அன்றாடத் தேவைகளுக்கு டின் இலக்கம் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அல்லது இனிவரும் காலங்களில் கடுமையாக்கப்படும்:
வங்கிச் சேவைகள்: புதிய வங்கி கணக்குகளைத் திறப்பதற்கும், பெரிய அளவிலான நிதிப் பரிமாற்றங்களுக்கும், சொத்துக்கள் வாங்குதல்/விற்றல்: காணி (நிலம்) அல்லது வீடுகளை வாங்கும் போதும் விற்கும் போதும்.
வாகனப் பதிவு: புதிய வாகனங்களை வாங்கும் போதும் அல்லது அவற்றைத் தன் பெயருக்குப் பதிவு செய்யும் போதும்.
ஏற்றுமதி/இறக்குமதி: வணிக ரீதியாக பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவர அல்லது வெளியே அனுப்ப.
அரச சேவைகள்:உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து ஏதேனும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு.
இலங்கையின் வரிமுறையில் நீண்டகாலமாக சில கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் மிகக் குறைந்த அளவினரே (கிட்டத்தட்ட 22 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் மட்டுமே) முறையாக வரி செலுத்துகின்றனர்.
பல வணிக நிறுவனங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல், பணமாக மட்டுமே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு தங்களின் உண்மையான வருமானத்தை மறைக்கின்றன (முறைசாரா பொருளாதாரம்).
முறைசார் துறையிலுள்ள அரச மற்றும் தனியார் ஊழியர்கள் (மாதாந்த வருமானம் 1,50,000 ரூபாவிற்கும் அதிகமானவர்கள்) 36 வீதம் வரை உச்ச வரி செலுத்துகிறார்கள்.
எனவே, இந்த முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்ததாக மாற்றி, வரியேற்பு செய்பவர்களைக் கண்டறிய இந்த டின் (TIN) முறைமை மிக முக்கிய காரணியாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும், இரட்டைக் குடியுரிமை கொண்ட அல்லது இலங்கையில் கடவுச்சீட்டு/முகவரி கொண்ட நபர்களுக்கும் இந்த டின் நடைமுறை முக்கியத்துவம் பெறுகின்றது.
வெளிநாட்டில் வசித்தாலும், இலங்கையில் ஒரு வங்கிக் கணக்கைப் பேணினாலோ, நிலையான வைப்புகளில் (Fixed Deposits) முதலீடு செய்திருந்தாலோ அல்லது இலங்கையில் சொத்துக்களைக் கொண்டிருந்தாலோ அந்நபருக்கு டின் (TIN) இலக்கம் நிச்சயமாகத் தேவைப்படும்.
இனிவரும் காலங்களில் டின் இலக்கம் இல்லாமல் இலங்கையிலுள்ள எவராவது தங்களது சொத்துக்களை விற்கவோ அல்லது வங்கிக் கணக்குகளைத் தடையின்றி இயக்கவோ முடியாத நிலை ஏற்படலாம்.
டின் இலக்கத்தைக் கட்டாயமாக்குவதில் அரசாங்கம் தீவிரமாக இருந்தாலும், இணையவழி (Online) கட்டமைப்பு முடக்கம், திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை போன்ற நடைமுறைச் சிக்கல்களும் நிலவுகின்றன. எனினும், வருங்காலங்களில் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக மனிதத் தலையீடுகள் குறைக்கப்பட்டு, அனைத்து நிதி நடவடிக்கைகளும் டின் இலக்கத்துடன் இணைக்கப்படவுள்ளன.
அநேகமாக டின் இலக்கத்தைப் பெற விரும்புவோர் அதனைச் செய்ய முடியாமைக்குக் கூறும் காரணங்கள் டின் இலக்கப் பதிவுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்பதுதான். டின் இலக்கத்தை நிங்கள் ஒன்லைன்மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.
இலங்கையில் ஒன்லைன் மூலம் TIN (வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்)பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்கள (IRD) இணையதளத்தில் e-Services -) Access to e-Services -) Taxpayer Registration என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அப்பகுதிக்குச் சென்றதும் “Registration Type” என்பதற்கு “Individual” என்பதைத் தெரிவு செய்யவும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் தேசிய அடையாள அட்டை எண் மற்றும் முழுப் பெயரை (ஆங்கிலத்தில்) வழங்க வேண்டும்.
பூட்டப்பட்ட வடிவில் (Locked PDF) வரும் உங்களது TIN சான்றிதழைத் திறப்பதற்கான (Unlock) கடவுச்சொல்லாக (Password) இந்த ‘Name with Initials’ விபரமே பயன்படும் எனபதால் அதனை சரியாக பூர்த்தி செய்யவும்.
டின் சான்றிதழ் மற்றும் PIN இலக்கம் என்பன உங்களுக்கு மின்னஞ்சல் மூலமே அனுப்பப்படும் என்பதால், சரியான E-mail முகவரி மற்றும் கைபேசி எண்ணை வழங்குவது கட்டாயமாகும்.
வேலைவாய்ப்பு/வியாபாரம் இல்லாதவர்கள் (மாணவர்/இல்லத்தரசி) “Other” என்பதைத் தெரிவு செய்து காரணத்தைக் குறிப்பிடலாம். நிரந்தர முகவரியை (Permanent Address) ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளிட வேண்டும். தற்போதைய முகவரி வேறாக இருந்தால் அதையும் தனியாகக் குறிப்பிடலாம்.
திருமணமானவர்கள் துணைவர்/பிள்ளைகளின் விபரங்களையும், தனிநபர் வணிகம் செய்யின் வணிகப் பதிவு விபரங்களையும் சேர்க்கலாம். இதனைப் பூரணப்படுத்த ஆவணங்களையும் நீங்கள் இணைக்கவேண்டியிருக்கும்.
அடையாள அட்டையின் (NIC) தெளிவான வண்ண ஸ்கேன் பிரதி அல்லது புகைப்படத்தை PDF வடிவில் பதிவேற்ற வேண்டும்.
NIC முகவரியும் விண்ணப்ப முகவரியும் வேறாயின், மின்சாரம்/நீர்/வங்கி அறிக்கை அல்லது கிராம உத்தியோகத்தர் சான்றிதழைப் பதிவேற்றவும். நோக்கத்தைத் தெரிவு செய்து “Submit” செய்த பின் கிடைக்கும் ஒப்புதல் சீட்டை சேமித்து வைக்கவும்.
விண்ணப்பித்த 5 நாட்களுக்குள் உங்களது TIN சான்றிதழ் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். டின் (TIN) என்பது வெறும் வரி செலுத்துவதற்கான அடையாள அட்டை மட்டுமல்ல, அது இலங்கையில் உங்களது சட்டபூர்வமான அனைத்து நிதி மற்றும் சொத்துரிமை நகர்வுகளையும் தீர்மானிக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாக மாறியுள்ளது.




