ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஈரான் புதிய தாக்குதல்கள்

4 Min Read

ஈரான் முடக்கி வைத்திருக்கும் ஹோர்முஸ் நீரிணையை திறக்கும் புதிய நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் நிலையில் இரு தரப்பும் வளைகுடாவில் புதிய தாக்குதல்களை நடத்தி இருப்பது பலவீனமான போர் நிறுத்தத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் நடவடிக்கையாக சிவில் கப்பல்கள் மீது இலக்கு வைத்த ஈரானிய படைகள் மற்றும் ஆறு சிறிய படகுகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அமெரிக்கா இந்த நீரிணையில் இருந்த பயணிகள் படகுகள் மீதே தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் ஆரம்பத்தில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததன் பின்னர் முதல் முறையாக ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானதாக அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

புதிய நடவடிக்கையின் ஓர் அங்கமாக அமெரிக்க கொடியுடனான இரு வர்த்தகக் கப்பல்கள் கடந்த திங்கட்கிழமை ஹோர்முஸ் நீரிணையை கடந்ததாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் நடத்திய 15 ஏவுகணைகள் மற்றும் நான்கு ஆளில்லா விமானங்களை வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஓர் ஆளில்லா விமானத்தால் முக்கிய எண்ணெய் நிலை ஒன்றில் பெரும் தீ பரவி இருப்பதோடு மூன்று இந்திய நாட்டவர்கள் காயமடைந்ததாக புஜைராவில் கிழக்கு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சிய கடற்கரைக்கு அப்பால் இரு சரக்குக் கப்பல்கள் தீப்பிடித்து எரிவதாக பிரிட்டன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை ஈரான் ஏற்கவோ அல்லது மறுக்காதபோதும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மீண்டும் சிக்கலுக்குள் இழுத்துச் செல்லப்படுவது குறித்து அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தை அல்லது அதன் எண்ணெய் நிலைகளை இலக்கு வைக்கும் திட்டம் ஈரானுக்கு இல்லை என்று அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் அரச தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தி இருக்கும் ஹோர்முஸ் நீரிணை மீதான முடக்கத்தை தளர்த்தும் தற்போதைய முயற்சி முழு அளவில் மீண்டும் போர் வெடிக்கும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. கடந்த பெப்ரவரி 28 இல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த போரை அடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.

எனினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நீரிணையை கடந்து பயணிக்கும்படியும் அமெரிக்கா தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம் கப்பல்களுக்கு கடந்த திங்களன்று அறிவுறுத்தி இருந்தது.

இந்த நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதனை கடப்பதில் கப்பல் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் காப்பீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். நீரிணையை திறக்கும் அமெரிக்காவின் முயற்சி மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் போர் நிறுத்தத்தை மீறும் செயல் என ஈரான் எச்சரித்து வருகிறது.

ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே இருக்கும் இந்த குறுகலான நீர்வழிப்பாதையில் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் சூழலில் நீரிணைக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு கட்டடம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஓமான் தெரிவித்துள்ளது. இதனால் நான்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் நான்கு வாகனங்கள் சேதமடைந்து அருகில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருப்பதாகவும் ஓமான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுடன் தம்முடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது. ‘ஹோர்முஸ் நீரிணையை அணுகவோ அல்லது நுழையவோ எண்ணும் எந்தவொரு வெளிநாட்டு இராணுவப் படையும், குறிப்பாக அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் இலக்குவைக்கப்படும் என எச்சரிக்கிறோம்’ என்று ஈரான் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை கடந்த ஏப்ரல் 13 தொடக்கம் தொடர்வதோடு, ஈரானின் குறைந்தது 49 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி அனுப்பப் பட்டிருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இந்த முற்றுகை அமைதிப் பேச்சுவார்த்தையில் அணு விவகாரம் மற்றும் ஏனைய இழுபறிக்கு உள்ளாகியிருக்கும் விடயங்கள் தொடர்பில் ஈரான் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய உதவும் என்று அமெரிக்கா நம்புகிறது. எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஈரான் முன்வைத்திருக்கும் புதிய முன்மொழிவுகளில் அமெரிக்காவின் தடைகளை நீக்குவது, முற்றுகையை கைவிடுவது, பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறுவது மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உட்பட அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவது போன்ற நிபந்தனைகள் உள்ளடங்குகின்றன.

இந்த முன்மொழிவு தொடர்பில் அமெரிக்கா வழங்கி இருக்கும் பதிலை தற்போது மீளாய்வு செய்து வருவதாக ஈரான் கூறியுள்ளது. எனினும் இந்த முன்மொழிவு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னதாக அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *