3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்த ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட குழுவினர், நேற்று (04) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்த பின்னர், இலங்கை தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சென்று விசேட கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவின் அவசர சிகிச்சை பிரிவு அத்துடன் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை ஆராய்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
இந்தப் விஜயத்தின் போது நோயாளர்களுக்கு சிகிச்சையின்போது பயன்படுத்தப்டும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டன.
இதனை தொடர்ந்து ரஷ்யக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட குழுவினர், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் மருத்துவப் பீடம், நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களுடன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்நாட்டில் செயல்படுத்தப்படும் இலவச சுகாதார சேவையானது ஒரு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவையாகும் என்றும், அந்த சேவையில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ரஷ்ய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதலை வலுப்படுத்துவதற்கும் அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கும் இத்தகைய வருகைகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று அமைச்சர் மிகைல் முரஷ்கோ மேலும் தெரிவித்தார்.
நட்புறவை வளர்க்கும் நோக்கில், இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் குமார விக்கிரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக, வைத்திய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வஜிர திஸாநாயக்க, பிரதிப் பதிவாளர் ஆர்.லோகேந்திரா, இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரஹதீப், பிரதிப் பணிப்பாளர் பிரஹதீப். ரத்னசேகர, விசேட வைத்திய நிபுணர் இந்திக ஜாகொட, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சர்வதேச சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் சமரநாயக்க, இலங்கை தேசிய வைத்தியசாலையின் செயலாளர்களான சுரேஷ் அபேகோன், நிலங்க ரொட்ரிகோ, சகுந்தலா விக்கிரமசிங்க மற்றும் விசேட வைத்தியர்கள், பொது வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் கலந்துகொண்டனர்.



