CSK அணி வீரர் ஆயுஷ் மாத்ரே IPL தொடரிலிருந்து விலகல்!

1 Min Read

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் CSK அணிக்கு, இளம் துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே காயத்தால் விலகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஆயுஷ் மாத்ரேவுக்கு இடது காலின் பின்புறத் தசையில் (Hamstring) காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது காயம் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் வரை தேவைப்படும் என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, நடப்பு IPL தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவர் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மாத்ரே 2 அரைசதங்களை விளாசி அணியின் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக இருந்தார்.

ஏற்கனவே விளையாடிய 6 போட்டிகளில் 4 தோல்விகளைச் சந்தித்துத் தடுமாறி வரும் சென்னை அணிக்கு, இவரது விலகல் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அணி ஏற்கனவே பல முக்கிய வீரர்களை காயத்தால் இழந்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமட் சில நாட்களுக்கு முன்பு தொடரிலிருந்து விலகினார்.

தொடர் தொடங்குவதற்கு முன்பே நேதன் எல்லிஸ் காயமடைந்தார்.

ஆரம்ப கட்டப் போட்டிகளில் டெவால்ட் பிரெவிஸ் விளையாடவில்லை.

இந்த இக்கட்டான சூழலில், அனுபவ வீரர் எம்.எஸ். தோனி அணிக்குள் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறித்த தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் விளையாடாத அவர், உடற்தகுதியைப் பொறுத்து அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

CSKதனது அடுத்த போட்டியில், ஏப்ரல் 23ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *