ஹார்முஸ் விவகாரம்… ஐ.நா தலையிட வளைகுடா நாடொன்று கோரிக்கை: காத்திருக்கும் சீனாவும் ரஷ்யாவும்

2 Min Read

ஹார்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க, நாடுகள் அனைத்துத் தேவையான வழிமுறைகளையும் பயன்படுத்திக்கொள்ள அதிகாரம் அளிக்கும் வகையிலான ஒரு ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மான வரைவை பஹ்ரைன் முன்மொழிந்துள்ளது.

வீட்டோ அதிகாரம்

குறித்த பிரேரணையை அமெரிக்காவும் எஞ்சிய வளைகுடா நாடுகளும் ஆதரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஈரானுக்கு மிகவும் நெருக்கமான ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரம் கொண்டிருப்பதால் பாதுகாப்புச் சபையின் ஒப்புதலைப் பெறுவது சாத்தியமில்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ஹார்முஸ் விவகாரம்... ஐ.நா தலையிட வளைகுடா நாடொன்று கோரிக்கை: காத்திருக்கும் சீனாவும் ரஷ்யாவும் | Hormuz Bahrain Un Backed Action

போர் முடிவுக்கு வந்தாலும், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் கை ஓங்கலாம் என்ற கவலைகளின் மத்தியிலேயே பஹ்ரைன் ஐக்கிய நாடுகள் மன்றத்தை நாடியுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுத்ததன் பின்னர் நீரிணையை மூடுவது ஈரானின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

எதிரிகளுக்கு ஹார்முஸ் நீரிணையில் அனுமதி இல்லை என ஈரான் அறிவித்ததில் இருந்து, அந்த நீர்வழித்தடத்தின் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து ஏறக்குறைய முழுமையாகவே முடங்கிப்போயுள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கையானது சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஒரு அச்சுறுத்தல் என்றே பஹ்ரைன் குறிப்பிட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஒவ்வொரு நாடும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யலாம் அல்லது ஒரு கூட்டணி அமைத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்றே பஹ்ரைன் முன்மொழிந்துள்ளது.

ஒன்பது வாக்குகள்

அத்துடன், ஈரான் மீது தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை விதிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஈரான், வர்த்தக மற்றும் வணிகக் கப்பல்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும், ஹார்முஸ் நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சட்டப்பூர்வமான போக்குவரத்து அல்லது கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பஹ்ரைன் கோரியுள்ளது.

ஆனால், 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பால் ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, அதற்கு ஆதரவாகக் குறைந்தது ஒன்பது வாக்குகளும், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மறுப்பு வாக்குகளும் (vetoes) இல்லாமல் இருக்க வேண்டும்.

ஹார்முஸ் விவகாரம்... ஐ.நா தலையிட வளைகுடா நாடொன்று கோரிக்கை: காத்திருக்கும் சீனாவும் ரஷ்யாவும் | Hormuz Bahrain Un Backed Action

இதில் ஈரானுக்கு ஆதரவு நிலையில் இருக்கும் சீனாவும் ரஷ்யாவும் கண்டிப்பாக பஹ்ரைனின் இந்த ஹார்முஸ் பிரேரணையை நிராகரிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஈரான் மீதான போரை இஸ்ரேலும் அமெரிக்காவும் கைவிட வேண்டும் என ரஷ்யாவும் சீனாவும் அழுத்தமாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *