பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மருத்துவமனையொன்றில் நேற்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் மகப்பேறு வார்டில், உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்த பிரிவில், குளிரூட்டியின் கொம்ப்ரசர் வெடித்ததால் இத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறதென மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தின் போது மருத்துவமனை ஊழியர்களால் ஒரு குழந்தையை மீட்க முடிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையின் வார்ட்டின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், ஆறு தீயணைப்பு வாகனங்களும் நான்கு ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் தீ உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதோடு குழந்தைகள் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வார்ட்டில் 15 குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 14 குழந்தைகள் முழுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் ஒரு குழந்தையையே காப்பாற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை பேச்சாளர் டொக்டர் அனீசா ஜலீல் கூறியுள்ளார். இச்சம்பவத்தையிட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விடுத்துள்ள அறிக்கையில், ‘இத்துயரச் சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்’ என்றும், ‘தீ விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.என்.என், டவுன் நியூஸ்




