ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரம் இன்று முதல் ஆரம்பம்

1 Min Read

ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரம் இன்றிலிருந்து (04) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 07ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூறவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுத் தொடர்பான குறைநிரப்பு மதிப்பீட்டு மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படுதல் தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளை (05) அவுஸ்திரேலியாவுக்கு டொலர் 2.5 மில்லியன் கடன் மீள செலுத்தப்பட்டமை சம்பந்தமான சைபர் குற்றச்செயலுடன் தொடர்புடைய மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

வியாழக்கிழமையன்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் விலங்குகள் திருத்தச் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 7 தனிநபர் உறுப்பினர் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, நீதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் சபாநாயகரிடம் முன்மொழிவொன்றைக் கையளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் குறித்த முன்மொழிவில் நேற்று (03) கையொப்பமிட்டுள்ளதுடன், அதற்கு எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது, சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காகவே இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *