– நிரந்தரப் பாலங்களை அமைக்கவும் இந்தியா தயார்
இலங்கையின் உட்கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா வழங்கியுள்ள 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான விசேட உதவித் திட்டத்தின் கீழ், மற்றுமொரு தொகுதி ‘பெய்லி’ (Bailey) பாலங்கள் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மைத்ரி குல்கர்னி, சுமார் 251 மெற்றிக் தொன் எடையுடைய இந்தப் பாலங்களை கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்கவிடம் நேற்றுமுன்தினம் (06) கையளித்துள்ளார்.
‘டிட்வா’ (Ditwah) புயலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்துத் தொடர்புகளை விரைவாக மீள ஏற்படுத்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் இந்தப் பாலங்களை அமைக்கவுள்ளனர்.
ஏற்கனவே நாட்டின் 7 முக்கிய இடங்களில் 8 பெய்லி பாலங்கள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இந்த புதிய தொகுதியும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமென உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த கட்டமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிரந்தரப் பாலங்களைக் நிர்மாணிக்குமு; பணிகளையும் இந்தியா விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இத்திட்டம் நாட்டின் வீதிப் போக்குவரத்துத் துறையில் ஒரு நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




