விமல், உதய, திலித் உள்ளிட்ட அறுவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்

1 Min Read

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் துவான் சுரேஷ் சலே தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஷ்வர பண்டார, இலங்கை மகஜன கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் பேராசிரியர் மஹிந்த பதிரண ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று முன்தினம் (05) தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த விரிவான அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த ஆறு பேருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பான மனு மீது 2026 ஜூன் 10 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு வழங்கத் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக ஜூன் 7 ஆம் திகதி கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் போது இவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், நிலுவையில் இருந்த நீதிமன்ற விசாரணையில் தலையீடு செய்யும் வகையிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் 3(1)(ஆ) பிரிவை மீறும் வகையில், விசாரணையில் இருந்த வழக்கின் நீதித்துறை நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் நோக்கத்துடன் குறித்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சத்தியப்பிரமாணம் மற்றும் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விளக்கியிருந்தது. உத்தரவை அறிவித்த நீதவான், நிலுவையில் உள்ள வழக்கொன்றின் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு வெளியே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டமை, முதற்கண் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படக்கூடிய செயலாகத் தென்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *