மஸ்கெலியா – நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகினி எல்ல நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் நேற்று (22) காலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் நல்லதண்ணி தோட்ட கீழ் பிரிவில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே இதில் பயணித்துள்ளனர். முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் அருகிலுள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதில் பயணம் செய்த கந்தசாமி செல்வம் (46), ஓட்டுநர் இராமலிங்கம் திவாகரன் (26) மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரி மாணவர்களான ஆர்.எம்.விஸ்வதிவங்கர (13), செல்வம் தக்ஷனா (13) மற்றும் செல்வம் கம்ஷிகா (16) ஆகியோர் பயணித்து உள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் இராமலிங்கம் திவாகரன் மற்றும் கந்தசாமி செல்வம் (46) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேச மக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் இணைந்து
காயமடைந்த மாணவ, மாணவிகள் மூவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




