2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ மக்கள் போராட்டக் காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டாரவை கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், அவரது அடிப்படை உரிமைகளை மேல் மாகாணத்திற்கான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் அநுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னரே உயர்நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
போராட்டக் களத்தில் ஜனநாயக ரீதியாகக் குரல் எழுப்பிய ஒருவரைப் பொலிஸ் அதிகாரிகள் தன்னிச்சையாகக் கைது செய்து தடுத்து வைத்தமையானது, இலங்கையின் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகார பலத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்க நினைத்த பொலிஸ் உயர் அதிகாரிகளின் செயற்பாடு சட்டவிரோதமானது என மன்று உறுதிப்படுத்தியுள்ளமை, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குக் கிடைத்துள்ள பாரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.




