யுத்தத்தால் இடம்பெயர்ந்து மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேறிய 71 குடும்பங்களுக்கு
வீடமைப்புக்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.இதற்கான பூர்வாங்க வேலைத் திட்டம்
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்று (16) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.ஒவ்வொரு வீடுகளுக்கும் தலா இரண்டு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக 25 குடும்பங்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டது.
யுத்த காலத்தில் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்ந்து, யுத்தத்தின் பின்னர் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கே இவ்வாறு வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் இழப்பீடுகளோ அல்லது வீடமைப்பு நிதியுதவிகளோ கிடைக்கப் பெறாத 71 குடும்பங்களுக்கு இந்த வீடமைப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது.வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ், இந்த வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க;
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் தவறியுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டு வருவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார். இவ்வேலைத்திட்டத்திற்கு இணையாக, ‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக பயிர்ச் செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்புகளை எதிர்கொண்ட விவசாயக் குடும்பங்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் கே. காந்தீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.




