பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தடைசெய்யப்பட்ட போராட்டக் குழுவொன்றின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த மோதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பிற பகுதிகளில் வசிக்கும் அகதிகளுக்கான பிராந்திய சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 12 இடங்கள் தொடர்பான சர்ச்சையில் இருந்து இவ்வன்முறை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் பூஞ்ச் கோட்ட ஆணையர் வஹீத் கான் குறிப்பிடுகையில், பூஞ்ச் பகுதியில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வாகன தொடரணியைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகளைத் தாக்கியதாகவும் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.
இந்த மோதலில் தரார்காலில் ஆறு போராட்டக்காரர்களும் ஒரு பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டனர், அதேநேரம் ராவலகோட்டில் நடந்த மற்றொரு மோதலில் ஒரு போராட்டக்காரரும் ஒரு பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தனர் என்று அவர் கூறினார்.
இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் பிராந்தியத் தேர்தல்களுக்கு முன்னதாக, தேர்தல் ஏற்பாடுகளுக்கு எதிராகப் பேரணி நடத்த குறித்த குழு திட்டமிட்டிருந்ததற்கு ஒரு நாள் முன்னதாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
ரொய்ட்டர்ஸ், அரப் நியூஸ்




