சவூதி பல்பொருள் அங்காடிகளில் உயர் ரக இலங்கை தேயிலை அறிமுகம்!

2 Min Read

– ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியத்திற்கும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

இலங்கையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான ‘போகவந்தலாவ’ (Bogawantalawa) உயர்தரத் தேயிலை, சவூதி அரேபியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி (Supermarket) வலையமைப்பான தமிமி மார்க்கெட்டில் (Tamimi Markets) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரியாத்தில் அண்மையில் (09) இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்தத் தேயிலை வகையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

சவூதி அரேபியா என்பது இலங்கைத் தேயிலைக்கான மிக முக்கியமான ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாகும். இந்த புதிய அறிமுகத்தின் மூலம் போகவந்தலாவ தேயிலை இனி ‘Ceylon Tea Gardens’ எனும் நாமத்தின் கீழ் சவூதி நுகர்வோரைச் சென்றடையவுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட போகவந்தலாவ தேயிலை, அதன் தனித்துவமான சுவை, புத்துணர்ச்சி மற்றும் உயர்தரம் ஆகியவற்றால் சர்வதேச அளவில் ஏற்கனவே புகழ் பெற்றது என இந்நிறுவனத்தின் இணைத் தலைவர் லலித் குமார் அம்பானி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வாத், சவூதி அரேபியாவிற்கு இலங்கை மேற்கொள்ளும் ஏற்றுமதிகள் அண்மைக்காலமாக சீராக வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், தமிமி மார்க்கெட் வளாகத்தில் உயர்தர இலங்கைத் தயாரிப்புகளுக்கென பிரத்தியேகமான ‘Sri Lanka Corner’ ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனையையும் அவர் இதன்போது முன்வைத்தார்.

போகவந்தலாவ தேயிலை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அல்மாஸ் மரிக்கார் கருத்து வெளியிடுகையில், இந்தத் தேயிலை வெறுமனே வணிகப் பொருள் மாத்திரமன்றி, தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் நலன்புரி மற்றும் மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வையும் (CSR) உள்ளடக்கியது எனத் தெரிவித்தார். மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஏன் ரணசிங்க போகவந்தலாவ தேயிலையின் நீண்டகால வெற்றிக் கதையை இதன்போது விவரித்தார்.

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதிலும், உலகத்தரம் வாய்ந்த இலங்கைத் தயாரிப்புகளை மத்திய கிழக்கில் கொண்டு சேர்ப்பதிலும் இந்தத் தொடக்கமானது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமீமி மார்க்கெட்களின் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் அய்ஹாம் நாசர், வணிக மேம்பாட்டு பணிப்பாளர் புரூஸ் போஸ்ட்விக் மற்றும் கேடகரி முகாமையாளர் ஹுஸ்னி தாசிம் ஆகியோர், தங்களது வாடிக்கையாளர்களுக்கு உலகின் மிகச்சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் தமீமி மார்க்கெட்ஸ் எப்போதும் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.இவ்விழாவில் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு முதன்மைச் செயலாளர் தஷ்மா விதானவசம், போகவந்தலாவை நிறுவனத்தின் தயாரிப்பு புத்தாக்க உதவி முகாமையாளர் கபீர் தாரிக், தமீமி மார்க்கெட்டின் பிரிவ முகாமையாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *