சீனா கொண்டுவந்துள்ள புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம் தொடரபில் கடும் விமர்சனம்

2 Min Read

சீனாவில் “இன ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சட்டம்” என்ற புதிய சட்டம் ஜூலை முதலாம் திகதியன்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் உலகளவில் பெரும் விவாதங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

சீன அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள பல்வேறு இனக் குழுக்களிடையே “பொதுவான தேசிய அடையாளத்தை” உருவாக்குவதும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதும் தான் இந்தச் சட்டத்தின் நோக்கம். இதற்காக கல்வி, பொது இடங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் மாண்டரின் மொழியை முதன்மை மொழியாக்குவதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) போன்ற மனித உரிமை அமைப்புகள், இந்தச் சட்டம் உய்கர் (Uyghurs) மற்றும் திபெத்திய (Tibetans) போன்ற சிறுபான்மையினரின் தனித்துவமான கலாச்சாரம், மொழி மற்றும் மதச் சுதந்திரத்தை அழித்து, அவர்களைப் பெரும்பான்மை ஹான் (Han) சீன கலாச்சாரத்திற்குள் கட்டாயமாக இணைக்க வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Türk), இந்தச் சட்டம் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிப்பதால் இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவுதான் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவிற்கு வெளியே வசிக்கும் ஒரு நபர் இந்தச் சட்டத்தை மீறினால் , அவர் மீதும் இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சீனாவுக்கு அதிகாரம் உண்டு என இதில் கூறப்பட்டுள்ளது.

இது சீனாவுக்கு எதிரான சர்வதேசக் குரல்களை ஒடுக்குவதற்கும், “நாடு கடந்த ஒடுக்குமுறை” செய்வதற்கும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கும் என ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

தாய்வான் அரசு இந்தச் சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. எதிர்காலத்தில் சீனாவுக்குப் பிடிக்காத கருத்துகளையோ செயல்களையோ செய்யும் எந்தவொரு வெளிநாட்டுத் குடிமகனும் இந்தச் சட்டத்தின் கீழ் போலிக்குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம் என்றும், குறிப்பாகச் சீனாவுக்குப் பயணம் செய்வோருக்கு இதனால் ஆபத்து அதிகம் என்றும் தாய்வான் எச்சரித்துள்ளது.

சீன சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளங்களைச் சட்டப்பூர்வமாக அழிப்பதற்கும், உலகளவில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஒடுக்குவதற்கும் சீனா இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்பதே மனித உரிமை அமைப்புகளின் பிரதான குற்றச்சாட்டாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *