உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றது. இன்று கொழும்பில் நடைபெறவுள்ள 6ஆவது பாகிஸ்தான்–இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தூதுக்குழு வினரே பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தனர்.
அமைச்சுக்கு வருகை தந்த பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரை வரவேற்ற இலங்கை பாதுகாப்புச் செயலாளர் அவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, நடைபெற்று வரும் இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பரிமாற்றங்கள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பரஸ்பர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பரஸ்பர அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் அமிர் மஹ்மூத், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) Dr. நய்யார் நஸீர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மது பாரூக் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.




