போதைப்பொருளுக்கு எதிரான தேசிய நடவடிக்கையுடன் இணைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டு பண்ணும் சிறப்பு நிகழ்வு அநுராதபுரம் நகரம் மற்றும் அநுராதபுரம் புனித நகரைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
அநுராதபுரம் தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தலால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டு பண்ணும் வகையில் பல தலைப்புகளிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.
இதனுடன் சேர்த்து நகரில் பயணித்த பொது மக்களிடம் போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்கும் தேசிய நடவடிக்கையின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பதையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேரடியாக தெளிவூட்டினர்.
போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொசன் பண்டிகைக் காலம் முழுவதும் அநுராதபுரம் மற்றும் அநுராதபுரம் புதிய நகர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அநுராதபுரம் தலைமையக பொலிஸின் சமூகப் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.




