ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் வேண்டாம்

3 Min Read

ஈஸ்டர் உயிர்த்த ஞயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் எவ்வித தடைகளுமின்றி, நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் இறுதிவரை முன்னெடுக்கப்பட வேண்டுமென, கொழும்பு கத்தோலிக்க உயர் மறை மாவட்ட ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ எந்த விதத்திலும் தலையிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்றிருந்த ஊடக சந்திப்பிலே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது;
ஈஸ்டர் விசாரணைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ் சாட்டினாலும் எமக்குத் தெரிந்தவரை இதுவரையான விசாரணைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு உண்மை மற்றும் நீதி நிலை நிலைநாட்டப் படும் வரை இதற்கான நடவடிக்கைகள் தொடர வேண்டும்.ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயங்களுக்குள்ளானவர்களின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

விசாரணைகளை திசை திருப்புவதோ அல்லது அதற்கு தடைகளை ஏற்படுத்துவதோ பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் பாரிய அநிதியாகும்.பொலிஸ் மற்றும் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் போன்ற பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள், முறையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இவர்களுக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சுதந்திரமாக அவர்கள் தமது கடமையை நிறைவேற்றுவதற்கு இடமளிப்பது என்பன சமூகத்தில் அனைவரதும் பொறுப்பாகும். அந்த வகையில் எந்தவொரு குற்றம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகும்.

என்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கிற்கும் மற்றும் சுரேஷ் சலேவின் கைதுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. அவமதிப்பு வழக்கில் ஆரம்பத்தில் சுரேஷ் சலே, என்னை சந்தித்து இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில், நான் தெரிவித்துள்ள கருத்துக்களில் அவரது பெயரை நீக்கினால் வழக்கை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தாம், தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் நான் வெளியிட்ட கூற்றுக்கள் உண்மையானவை என்பதை என்றும் நான் நம்புகிறேன்.அதனை நீக்குவதற்கோ அல்லது வழக்கை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கோ நான் இணங்கவில்லை. விசாரணைகளில் வெளிவந்த விடயங்கள் சாட்சி மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். அது அவமதிப்பு வழக்குடன் சம்பந்தப்பட்ட காரணத்திற்கானது அல்ல. அந்த வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
ஈஸ்டர் ஞயிறு குண்டுத் தாக்குதலுக்கு அடிப்படை வாதம், இஸ்லாமிய வாதம்

அடிப்படையாக இருக்கலாம். எனினும் அந்த தாக்குதலைத் திட்டமிட்டவர்கள், அதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள், பாதுகாப்பு வழங்கியவர்கள் மற்றும் வேறு விதத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ளார்களா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசாரணைகள் அவசியம்.

ஒரு நபர் நாட்டுக்கு சேவை செய்தவராக இருக்கலாம். அவருக்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுமானால் சட்டப்படி அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவரது சேவைகளை காரணங்காட்டி விசாரணையை நிறுத்த முடியாது.

சுரேஷ் சலே யுத்தத்தை நிறைவு செய்வதற்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் சேவைகளை வழங்கி யிருந்தால், அதனை நாம் மதிக்கின்றோம். எனினும் அதனை வைத்து அவர் மீதான குற்றங்களை மறைக்க முடியாது. எந்த படை வீரருக்கும் கொலை செய்வதற்கான உரிமை கிடையாது. அதேபோன்று எந்த படை வீரர்களுக்கும் குற்றம் செய்வதற்கோ கொள்ளை யடிப்பதற்கோ எந்த வித உரிமையும் கிடையாது.

அவ்வாறானவர்கள் நாட்டுக்கு சேவை செய்திருந்தால் நாம் அதனை மதிக்கின்றோம். அதற்கு விருது வழங்கலாம். எனினும் அவ்வாறானவர்கள் குற்றம் செய்திருந்தால் அதற்கு சட்டம் முறையாக பிரயோகிக்கப்பட வேண்டும். அதில் இராணுவமா வேறு எவருமா என பார்க்க முடியாது. சித்திர வதைக்கு உட்படுத்தப்பட்டார்களா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

சித்திரவதைகள் நல்லது என நாம் எவரும் கூறவில்லை. அது தவறு என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். எனினும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். ஐந்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததாக கூறப்பட்டாலும் ஒரு மருத்துவர்தான் அந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளார். அத்தகைய அறிக்கையை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினை நீதிமன்றத்தில் எழுந்துள்ளது. அதனால் அது விடயத்தில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *