இலங்கையின் சமகால அரசியல் பரப்பில், புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் சூழலில், மீண்டும் இன ரீதியான மற்றும் மொழி ரீதியான பிரிவினைகளைத் தூண்டி, அதன் மூலம் அரசியல் குளிர்காய முற்படும் பழைய அரசியல் சக்திகளின் முயற்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அண்மையில் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆற்றிய உரை, சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்குத் தமிழ் மொழி தெரியாத ஒரு சிங்களவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாகாணத்தின் அபிவிருத்திகள் முடங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இக்கூற்று முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்பதை தற்போதைய ஆளுநரின் பின்னணி தெளிவாக நிரூபிக்கின்றது.
கடந்த 2024 செப்டம்பர் 26 அன்று கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக உயர்ந்த கல்வி மற்றும் நிருவாகத் தகைமைகளைக் கொண்ட ஒருவராவார். கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான இவர், ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் கலாநிதி (Ph.D.) பட்டத்தைப் பெற்றவர். ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியராகவும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் (2017–2023) பணியாற்றி நீண்ட நிருவாக அனுபவத்தைக் கொண்டவர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, சிங்கள சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும், தமிழ் மொழியைச் சரளமாகக் கையாளக்கூடியவர் என்பதுடன், மாகாணத்தில் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பெரும்பாலான உரைகளைத் தமிழிலேயே ஆற்றி வருகின்றார். இவ்வாறானதொரு பின்னணியில், தமிழ் பேசும் பெரும்பான்மை மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் மொழி ரீதியான பிளவுகளைத் தோற்றுவிப்பதற்காகவே, “தமிழ் தெரியாத ஆளுநர்” என்ற போலிப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக நடுநிலைச் சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை சமூகங்களுக்கு, விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் மேடைகளில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா எதிர்மறைப் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்ற உடனேயே, அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அவர் அறிவித்தார்.
மக்களின் நீண்டகாலத் தேவைகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்துவதற்காக அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் நடந்துகொண்ட விதம் அரச அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அரச உயர் அதிகாரிகள் முன்னிலையில், முறையான நிர்வாகக் கட்டமைப்புக்குப் புறம்பாக, சச்சரவுகளை ஏற்படுத்தி, கூட்டத்தைக் குழப்ப முற்பட்ட செயல் ஒட்டுமொத்த ஜனநாயகப் பண்புகளையும் மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இத்தகைய கூட்டங்களை தலைமை தாங்கி நடத்திய அனுபவமுள்ள ஒரு மக்கள் பிரதிநிதி, திட்டமிட்டு இவ்வாறான முறுகல் நிலையைத் தோற்றுவிப்பது, அரசாங்கத்திற்கு எதிராகத் காட்டிக்கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கான ஓர் உத்தியே அன்றி வேறில்லை.
இதற்கு முன்னரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி அறியாத பலர் ஆளுநர்களாகப் பதவி வகித்தபோது மெளனம் காத்த இந்த அரசியல் தலைவர்கள், தற்போதைய கட்டமைப்பின் கீழ் மட்டும் இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கடந்த கால ஆட்சிகளின் போது, சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பல்வேறு ஒடுக்குமுறைகளும், வெறுப்புப் பிரசாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இஸ்லாமிய மார்க்க நம்பிக்கைகளுக்கு முரணாக ஜனாஸாக்கள் கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டபோதும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பொதுச்சொத்துகள் அழிக்கப்பட்டபோதும், தங்களின் பதவிகளையும் அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக மௌனம் காத்தவர்கள், இன்று மாகாண சபை தேர்தல் தற்போதைக்கு இல்லை என்ற கட்சிச் செயலாளரின் கருத்தை வைத்து ‘முதலைக் கண்ணீர்’ வடிக்க முற்படுகின்றனர்.
ஆளுநர் பதவி என்பது மாகாணத்தின் நிருவாகத்தைக் கவனிக்கும் அரசியலமைப்புக்குட்பட்ட ஒரு நடுநிலையான பதவியாகும். அவர் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாகச் செயல்படுகிறார். எனவே, அவர் மீதான இத்தகைய ஆதாரமற்ற அரசியல் விமர்சனங்கள், மாகாணத்தின் சிவில் நிருவாகக் கட்டமைப்பிலும் திட்ட அமுலாக்கங்களிலும் தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கக்கூடும்.
ஒரு பல்லின ஜனநாயக நாட்டில், உண்மைக்குப்புறம்பான விடயங்களை உணர்ச்சி பூர்வமாகத் திரிபுபடுத்தி, அமைதியைக் குலைக்கும் செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்தியையும், தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையிலான பலமான இணக்கப்பாட்டையும் எட்ட வேண்டுமாயின், பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் போலிப் பிரசாரங்களைத் தவிர்த்து, நடுநிலையான மக்கள் நல அரசியலை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும்.



