இந்தியாவின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே 13ஆம் திகதி பதவியேற்று, மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி முறியடிக்க உள்ளார். இந்த மைல்கல் மோடியின் அரசியல் வாழ்க்கையில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாகும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மிக நீண்ட, தொடர்ச்சியான பதவிக் கால சாதனையை அவர் ஏற்கெனவே கடந்த 2025 ஜூலை 25ஆம் திகதி முறியடித்திருந்தார். இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை தொடர்ச்சியாக 4,077 நாட்கள் பிரதமராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்கு பிந்திய தொடக்க ஆண்டுகளில் நாட்டை நேரு வழி நடத்தியபோது, இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 34 கோடியாக இருந்தது. 2014-ல் மோடி பதவியேற்றபோது மக்கள் தொகை 131 கோடியை தாண்டியது. தற்போது அது 146 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 1951- 52இல் நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்ட நிலையில், இந்த எண்ணிக்கை 2014ல் 464 ஆக உயர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் 744ஐ எட்டியது. முதல் பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 17 கோடியாக இருந்த நிலையில் இது 2014க்குள் 83 கோடிக்கும் அதிகமாக வளர்ந்திருந்தது.



