இலங்கையில் அடியெடுத்து வைக்கும் ‘மெட்ரோ’ மற்றும் மின்சார ரயில் சேவை

2 Min Read

ரயில்வே துறையின் தற்போதைய மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் எதிர்கால மின்சார ரயில் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படவுள்ள இரண்டு முக்கிய விடயங்களை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அவர்கள் விளக்கியுள்ளார்.

முதலாவது விடயம் தற்போது அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ரயில் பாதையில், ரயில்களை உடனடியாக இயக்குவதற்கு ஏதுவான வகையில் முதற்கட்டப் பணிகள் தற்காலிகமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

ரயில்கள் ஓடத் தொடங்கிய பின்னர், எதிர்காலத்தில் பெய்யக்கூடிய அதிகப்படியான மழையினால் மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்படாத வண்ணம் முறையான சரிவு பாதுகாப்புப் பக்கச்சுவர்கள் மற்றும் வடிகாலமைப்புத் தொகுதிகள் அமைக்கப்பட்டு இப்பாதைகள் முழுமையாக மேம்படுத்தப்படும்.

இரண்டாவது விடயம் இலங்கையின் தற்போதைய கடலோரப் பாதை, பொல்கஹவெல – ரம்புக்கனை ஊடான மலையகப் பாதை மற்றும் களனி பாதை ஆகியவற்றுக்கு மேலதிகமாக, அடுத்த ஆண்டு (2027) முதல் புதிய மின்சார ரயில் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்திட்டங்களின் கீழ், தண்டவாளங்களுக்கு இடையிலான அகலம் கூடிய “Standard Gauge” (4 அடி 8 அங்குலம் அகலம்) கொண்ட புதிய தண்டவாளப் அமைப்பும், மின்சார ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. களுத்துறையிலிருந்து மருதானை வரையும், பொல்கஹவெல வரையான மலையகப் பாதையிலும், மாகும்புரவிலிருந்து மருதானை வரையான இரத்தினபுரி பாதையிலும் இத்திட்டம் நீண்டகால நோக்கில் செயல்படுத்தப்படும்.

முழுமையான பெரிய ரயில் கட்டமைப்பை ஒரே நேரத்தில் மாற்றியமைக்க முடியாததால், அடுத்த ஆண்டில் (2027) கொழும்புக்கு வேலைகளுக்கு வந்து செல்வோர் நலன் கருதி, அடிக்கடி பயணிக்கும் குறுகிய தூர மின்சார ரயில் சேவை பின்வரும் பாதைகளில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படும்:

மருதானையிலிருந்து மாகும்புர வரை (ஆரம்பக் கட்டம்).
கோட்டையிலிருந்து ராகம வரை.
கோட்டையிலிருந்து பாணந்துறை வரை.

இந்த ‘மெட்ரோ’ (Metro) ரயில் சேவையானது 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான ஒரு பாரிய நீண்டகாலத் திட்டமாகும். எனினும், இதன் முதலாவது கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் இதன் ஆரம்பக் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் எனப் பிரதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *