விராட் கொஹ்லியின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்தடுத்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
முதல் கிண்ணத்தை வெல்ல 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னரே அந்த அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை கிண்ணத்தை வென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்து சம்பியன் பட்டத்தை தக்கவைத்த அணியாக பெங்களுரு பதிவானது.
அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களையே பெற்றது. வெஷிங்டன் சுந்தர் மாத்திரம் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பெங்களூரு அணி முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் ஆரம்ப வீரராக விராட் கொஹ்லி கடைசி வரை களத்தில் இருந்து அந்த அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். 42 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கொஹ்லி போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றபோதும் தொடர் நாயகன் விருது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் 15 வயது வைபவ் சூர்யவன்சிக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.



