போலி மின்னஞ்சல், SMS, வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் பண மோசடி கும்பல்
அதிரடிப்படையின் சைபர் பிரிவு விசாரணைநமது நிருபர்
போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இணையவழி அபராதம் செலுத்துதலின் போது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் பொலிஸ்மா அதிபரின் பெயரைப் போலியாக பயன்படுத்தி செயற்பட்டுவரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் வலையமைப்பு தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சைபர் பாதுகாப்பு விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு போலியான SMS மற்றும் வட்ஸ்அப் செய்திகள் அனுப்பி அவர்களைத் தவறாக வழிநடத்தி போலியான இணையத்தளங்கள் மூலம் தண்டப்பணம் செலுத்த வைப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் CCTV காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து, இலங்கை பொலிஸார் அனுப்பியதுபோல் தோன்றும் வகையில் அண்மைக்காலங்களில் பல போலி தொலைபேசி இலக்கங்களிலிருந்து SMS மற்றும் வட்ஸ்அப் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அச்செய்திகளில் மேற்கண்ட குற்றங்களுக்கு தண்டப் பணத்தை செலுத்துவதற்காக https://thecourierguy.cu.cc/lk என்ற போலியான இணையத்தளத்திற்குள் நுழையுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த இணையத்தளத்திற்குள் நுழைபவர்கள், அபராதத் தொகையை செலுத்தும் செயல்முறை என நம்பவைத்து அவர்களின் வங்கி அட்டை விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்கள் சூழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கட்டண சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள GovPay இணையதளத்தைப் போன்ற தோற்றத்தில் இந்த போலி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் முழுமையாக போலியாக உருவாக்கப்பட்ட இணையதளமாகும். எனவே போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான இவ்வாறான செய்திகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை பொலிஸ்மா அதிபரின் பெயரைப் போலியாக பயன்படுத்தி செயற்பட்டுவரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் வலையமைப்பு தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சைபர் பாதுகாப்பு மற்றும் திறந்த மூல விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது
இலங்கை பொலிஸ் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பெயரையும் பொலிஸ்மா அதிபரின் பெயர் மற்றும் போலி கையொப்பத்தையும் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மிரட்டல் மற்றும் பணம் கேட்கும் மின்னஞ்சல் வலையமைப்பு குறித்து இதன் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்செயற்பாடுகள் மூலம் இலங்கை பொலிஸின் நற்பெயருக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கவனிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான அச்சுறுத்தும் அல்லது அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் மின்னஞ்சல் தொடர்பாக தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாக வேண்டாமெனவும் அந்த மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதிலிருந்தும் அல்லது அவர்கள் கோரும் பணத்தை செலுத்துவதிலிருந்தும் தவிர்க்குமாறும், அந்த மின்னஞ்சல்களிலுள்ள இணைப்புகளை (லிங்க்) திறக்காமல் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இலங்கை பொலிஸ் கணினி குற்றப்பிரிவு விசாரணைப்பிரிவிற்கோ அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இம் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை பொலிஸார் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



