அணித் தலைவர் ரஜத் பட்டிதார் விளாசிய 33 பந்துகளில் 93 ஓட்டங்கள் மூலம் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான பிளே ஓஃப் போட்டியில் 92 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
தர்மசாலாவில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற பிளே ஓஃப் சுற்றில் முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணி தோற்றபோதும் அந்த அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு உள்ளது. நாளை (29) அஹமதாபாத்தில் தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வெற்றியீட்டினால் குஜராத்தினால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பெங்களூரு சவாலான பந்துவீச்சுக்கு மத்தியிலும் வேகமாக ஆடி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது. ஐபிஎல் பிளே ஓஃப் சுற்றுப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக இது இருந்தது. பட்டிதால் ஆட்டமிழக்காமலே 93 ஓட்டங்களை பெற்றதோடு இதற்கு அவர் 5 பௌண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை விளாசினார்.
விராட் கொஹ்லி 25 பந்துகளிலும் கருண் பாண்டியா 28 பந்துகளிலும் தலா 43 ஓட்டங்களைப் பெற்றனர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மத்திய வரிசையில் ராகுல் திவாட்டியா 43 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எவரும் கைகொடுக்கவில்லை. திவாட்டியா தவிர மேலும் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஜகப் டப்பி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.



