ஹமாஸ் இராணுவ தலைவர் கொல்லப்பட்டார் – இஸ்ரேல்

1 Min Read

காசாவின் வடக்குப் பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸின் இராணுவப் பிரிவு தலைவரான முகமது ஓதே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள், ஓதே மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்தனர்.

இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ் அல்-தின் அல்-ஹத்தாத்திற்குப் பிறகு, ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாமின் தலைவராக இவர் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்நியமனத்தை ஹமாஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. முகமது ஓதே ஹமாஸின் முன்னாள் உளவுத்துறைத் தலைவராகக் கடமையாற்றியவராவார்.

ஓதேயினதும் அவரது கூட்டாளிகளதும் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் நோக்கில் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை கண்காணிப்பைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ரெமால் சுற்றுப்புறத்தில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதோடு 20 பேர் காயமடைந்ததாக அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *