கிரிக்கெட் மாற்றக் குழு நியமனத்தால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி நெருக்கடியா?

1 Min Read

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தற்போது “நிதி நெருக்கடியை” எதிர்கொண்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அந்த நிறுவனம் இன்று (19) விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் நியமிக்கப்பட்ட “கிரிக்கெட் மாற்றக் குழு” (Cricket Transformation Committee) தொடர்பில் வௌியாகும் இத்தகைய செய்திகள் தவறானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்கவே இந்த மாற்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கியுள்ளது.

இதற்கான முறையான அறிவித்தல் அரசாங்க வர்த்தமானியில் (Gazette) வெளியிடப்பட்டுள்ளதால், புதிய செயற்குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்படும் வரை நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் நிதியைக் கையாளும் முழுமையான சட்டபூர்வ அதிகாரம் இந்த மாற்றக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகப் பணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நிதி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் பொதுமக்களைத் திசைதிருப்பக்கூடியவை என அந்த அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அன்றாடச் செயற்பாடுகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக:
– வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள்.
– பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் விநியோகஸ்தர்களுக்கான கொடுப்பனவுகள்.
– ஏனைய நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்தும் உரிய காலத்தில் மற்றும் எவ்வித இடையூறுமின்றித் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *