நயிதி ரானாவின் அபார பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 104 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மிர்பூரில் நேற்று (12) முடிவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் பங்களாதேஷ் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் கடைசியாக 2024 இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் அணி 2–0 என கைப்பற்றி இருந்தது.
ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று (12) பாகிஸ்தான் அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி முதல் மூன்று விக்கெட்டுகளையும் 63 ஓட்டங்களுக்கு இழந்தது.
முதல் வரிசையில் வந்த அப்துல் பசால் நிதானமாக ஆடி 113 பந்துகளுக்கு 66 ஓட்டங்களைப் பெற்றபோதும் மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர்.
குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ரானா முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அவர் 9.5 ஓவர்களில் 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியை கொடுத்தது. இதனால் பாக். அணி 52.5 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கே சுருண்டது. தக்சின் அஹமட் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்ததினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி அதன் தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷான்டோவின் சதத்தின் மூலம் (101) முதல் இன்னிங்ஸில் 413 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்காக ஆரம்ப வீரர் அஸான் அவைஸ் 103 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணிக்கு முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களைப் பெற முடிந்தது.
தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 70.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.
முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற ஷான்டோ 87 ஓட்டங்களை குறித்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது.
இந்த வெற்றியுடன் பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மே 16 ஆம் திகதி சில்ஹட்டில் ஆரம்பமாகவுள்ளது.



