இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக அமைப்பை மறுசீரமைக்க எரான் விக்ரமரத்ன குழு உறுதி

4 Min Read

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என்று அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றக் குழு பதவி விலகியதை அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த மறுசீரமைப்புக் குழுவை நியமித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய ஒன்பது பேர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி ஆகியோருடன் துஷிர ரதல்ல, அவன்தி கலம்பனே, பிரகாஷ் ஷாப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் டினால் பிலிப் ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோரின் அழைப்பிற்கு இணங்கவே, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதாக எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணித்தலைவர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், கடந்த புதன்கிழமை (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பொறுப்பை ஏற்கத் தீர்மானித்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பிரதான இரு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்தும் விக்ரமரத்ன தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறந்த நிர்வாகத்தை அமைத்தல்: சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி.) விதிகளுக்கு இணங்க புதிய யாப்பு ஒன்றை செயற்படுத்துவது உட்பட இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டமைப்பை முழுமையாக சீரமைத்து, வெளிப்படைத்தன்மை, ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்முறைத் தன்மையை உட்புகுத்தி, பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குதல்.

களத்தில் சிறந்த செயல்திறன்: புதிய கட்டமைப்புகள், உலகத் தரமான வசதிகள் மூலம் தேசிய அணிகளை வலுப்படுத்துவதோடு சர்வதேச தளத்தில் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்துவதற்கும் இலங்கையை உலகத் தரத்தில் உயர்த்துவதற்கும் ஊக்குவிப்பு வழிமுறைகள் அறிமுகம் செய்தல்.

‘பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக மட்டத்தில் விளையாட்டு வீரராக மற்றும் அதன் பின்னரும் இந்த கிரிக்கெட் விளையாட்டுக்காக அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறேன். இந்நாட்டு கிரிக்கெட்டின் எதிர்காலத்தை சிறந்த வழிக்கு கொண்டுவருவதற்கு தலைமைத்துவத்தை வழங்க கிடைத்தது எனது பாக்கியம் என்பதோடு நான் இதனை பாரதூரமான பொறுப்பு ஒன்றாக கருதுகிறேன்.

இந்நாட்டு விளையாட்டு ரசிகர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் எதிர்பார்ப்பதோடு, உங்களது ஆர்வத்திற்கு நியாயத்தை வழங்கி நிலையான பிரதிபலன் ஒன்றை வழங்கவதற்கு நான் உறுதி அளிக்கிறேன்’ என்று எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் அரசு மேற்கொண்டிருக்கும் இந்த மாற்றம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் இதுவரை எந்த கருத்தையும் வெளிடவில்லை. எனினும் 2023 இல் இலங்கை கிரிக்கெட் சபையை அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் கலைத்ததை அடுத்து, அரசின் தலையீடு என்ற காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட சபையை, ஐ.சி.சி. இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

2015 இல் கடைசியாக இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு அரசு இடைக்கால சபை ஒன்றை நியமித்தபோதும், இலங்கை கிரிக்கெட் சபையை ஐ.சி.சி. தனது சபை கூட்டங்களில் கண்காணிப்பு அந்தஸ்துக்கு தரம் இறக்கி இருந்து. அப்போது ஐசிசி நிதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில், இலங்கை கிரிக்கெட் சபை யாப்பில் தலைமை பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்படும்போது நிறைவேற்றுக் குழு கூடி பதவியில் இருக்கும் பிரதித் தலைவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்தப் பதவியில் இருந்த ஜயந்த தர்மதாச மற்றும் ரவின் விக்ரமரத்ன இருவருமே கடந்த செவ்வாயன்று தலைவருடன் சேர்ந்து பதவி விலகினர்.

இந்நிலையில் கிரிக்கெட் சபை விதிகளுக்கு அப்பால் 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 33 ஆவது பிரிவின்படி அரசு செயற்பட்டுள்ளது. இதில் தேசிய விளையாட்டு சங்கம் ஒன்றை கலைப்பது மற்றும் இடைக்கால நிர்வாகம் ஒன்றை நியமிப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் விதிமுறைகளுடன் முழுமையாக இணங்கி செயற்படுவதாக இடைக்கால நிர்வாக சபை தலைவர் எரான் விக்ரமரத்ன உறுதி அளித்துள்ளார்.

இதில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒன்பது உறுப்பினர்களின் கிரிக்கெட் நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற சிலரும் அடங்குகின்றனர். குறிப்பாக சிதத் செத்தமுனி தலைமையிலேயே 2015 இல் இடைக்கால சபை அமைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று பிரகாஷ் ஷாப்டருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்தில் அனுபவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பெருநிறுவனத் துறையில் அனுபவம் பெற்றவராக இருக்கும் அவன்தி கொலம்பகே இந்தக் குழுவில் ஒரே பெண் உறுப்பினராவார்.

கடந்த பெப்ரவரியில் இலங்கை இணைந்து நடத்திய டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சோபிக்கத் தவறியது தொடர்பில் பதவி விலகிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மீது கடும் எதிர்ப்புகள் எழுந்திருந்தன. சில்வா போட்டியின்றி தொடர்ந்து மூன்று தவணைகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக செயற்பட்டதோடு 2014 தொடக்கம் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பிரதான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சோபிக்கத் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *