காசாவுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச்சென்ற 22 கப்பல் மற்றும் படகுகளும் அவற்றில் பயணித்த 175 பலஸ்தீன ஆர்வலர்களும் இஸ்ரேலிய படையினரால் கிரீட் தீவுக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை உடைக்கும் நோக்கில், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலிருந்து மொத்தம் 58 கப்பல்கள் மற்றும் படகுகள் இணைந்து, இரண்டு வாரங்களுக்கு முன்பு இக் கப்பல் படை பணத்தை ஆரம்பித்தது.
அவற்றில் மேற்படி 22 படகுகளும் அவற்றில் இருந்த 175 பலஸ்தீன ஆர்வலர்களும் இஸ்ரேலிய கடற்படை முற்றுகையின் கீழ் உள்ள காசாவிலிருந்து 965 கிலோ மீற்றர் தொலைவில் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்று குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை கடற்கொள்ளை என்றும் அவர்கள் கண்டித்துள்ளனர். 22 கப்பல்களும் சர்வதேச சட்டத்தை மீறி இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தனது சொந்த எல்லைகளுக்கு அப்பால், எந்தவித விளைவுகளோ தடைகளோ இன்றி செயல்பட முடியும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த 20 இற்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த சுமார் 175 ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்படுவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை, குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் எஞ்சிய 36 படகுகளில் பெரும்பாலானவை கிரீட் தீவின் தென்மேற்குக் கடற்கரைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்தன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



