தொடரும் தோனியின் வெயிட்டிங் கேம்

3 Min Read

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்பது மில்லியன் டொலர் கேள்வியாக மாறியுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் தோனி ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

கடந்த மார்ச் 28ஆம் திகதி 19ஆவது ஐபிஎல் சீசன் தொடங்கியது. இந்த சீசனின் தொடக்கத்திலேயே காலின் பின் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு பாதிப்பு காரணமாக தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது. இதனால் இந்த சீசனில் முதல் இரண்டு வார கால ஆட்டங்களை அவர் தவறவிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது அது ஒரு மாத காலத்தை நெருங்கிவிட்டது.

இப்போது லீக் சுற்றில் சரியாக 7 ஆட்டங்களை சிஎஸ்கே விளையாடி முடிந்துவிட்டது. இன்னும் அந்த அணிக்கு 7 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும் 44 வயதான தோனி இன்னும் இந்த சீசனில் களமிறங்கவில்லை.

இதற்கிடையே, சிஎஸ்கே அணியின் ஆட்டத்துக்கு முன்னதாக தோனி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. அதுவே ‘மேட்ச் டே’ அன்று தோனி அணியின் டக்-அவுட்டில் கூட தனது வருகையை பதிவு செய்வது இல்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகளுடனான ஆட்டத்துக்கு முன்பாகவும் இதுவே நடந்தது.

டாஸின்போது சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் தோனியின் பெயர் இடம்பெறுமா அல்லது இம்பாக்ட் வீரராக அவர் தலைக்காட்டுவாரா என ரசிகர்களின் எதிர்பார்ப்பெல்லாம் வெறும் எதிர்பார்ப்பாகவே உள்ளது. அவரோ களத்துக்கு வெளியே தனது வெயிட்டிங் கேமை தொடருகிறார்.

“ஃபிட்னஸை பொறுத்தவரையில் தோனி முன்னேற்றம் கண்டு வருகிறார். களம் திரும்ப அவரும் கடினமாக முயற்சித்து வருகிறார். அவரை காண இரசிகர்களும் ஆவலாக உள்ளனர். அடுத்த சில ஆட்டங்களில் அவர் நிச்சயம் விளையாடுவார் என நம்புகிறோம்.

தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நூறு சதவீத உடற்தகுதி அவசியம் என கருதுகிறார். வலைப் பயிற்சியில் சிறப்பாக பேட் செய்கிறார். நிச்சயம் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் விளையாடுவார். ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாட மாட்டார்.

கணுக்காலில்தான் அவருக்கு பாதிப்பு. அதனால் அது ரன் எடுக்க ஓடும்போது அந்த பாதிப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த கூடாது என்பதால் கவனம் இருக்கிறார். நிச்சயம் அடுத்த சில ஆட்டங்களுக்குள் அவர் களத்துக்கு திரும்புவார்” என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது தோனி கால் பகுதியில் அசவுகரியமாக இருப்பதாக சொன்னார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மேட்ச் ஃபிட்னஸ் சார்ந்து நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறார். ஓட்டம் எடுப்பதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது என்பதில் உறுதி இருக்கிறார்.

தோனி அடுத்த போட்டியில் விளையாடுவாரா, அதற்கடுத்து விளையாடுவாரா என்பது தெரியாது. ஆனால், நிச்சயம் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்துக்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

தோனி தனது உடற்தகுதியை உறுதி செய்தாலும் ஆடும் லெவனில் இடம்பெறாமல் இம்பாக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

வரும் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி ‘தோனி விளையாடுவாரா?’ என்பது மட்டும்தான்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *