ஒலிம்பிக் குழு தலைமைக்கு போட்டியிடும் உமருக்கு எதிரான ஆட்சேபனைகள் இரத்து

3 Min Read

தேசிய ஒலிம்பிக் குழு தலைமை பதவிக்கு போட்டியிடும் இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று ஆட்சேபனை மனுக்களையும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழு நிராகரித்துள்ளது.

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் 11 முக்கிய பதவிகளுக்காக மொத்தம் 33 அபேட்சகர்கள் போட்டியிடுவதோடு இதில் தலைமை பதவிக்கு உமருடன் ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். உமருக்கு எதிராக தற்போதைய ஒலிம்பிக் குழு செயலாளர் ரிப்தி பஹ்மி, பொருளாளர் பிரிதிவிராஜ் பெரேரா மற்றும் முன்னாள் சர்வதேச கால்பந்து நடுவர் சுனில் செனவீர ஆகியோரே ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

 

ஒலிம்பிக் குழு வங்கிக் கணக்கு தொடர்பில் அரச வங்கி ஒன்றில் இருந்து விளக்கம் கோரியது மற்றும் ஒலிம்பிக் சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோதமான பணக் கொடுக்கல் வாங்கல் குறித்து பொலிஸ் முறைப்பாடு தொடர்பிலேயே பெரேரா மற்றும் பஹ்மி ஆகியோர் உமருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதேபோன்று குசலா சரோஜினி அறிக்கையின் விடயங்கள் சிலதையும் மேலும் சில குற்றச்சாட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டே சுனில் செனவீர எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். எனினும் ஒலிம்பிக் குழு தேர்தலில் பொருளாளர் பதவிக்காக வேட்புனு தாக்கல் செய்திருந்த இலங்கை கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் வருன் அஜித் ஜயகுமாரவின் வேட்மனுவை தேர்தல் குழு நிராகரித்துள்ளது. மற்ற அனைத்து ஆட்சேபனைகளையும் அந்தக் குழு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பொருளாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஜயகுமார குறித்த தகைமைகளை பூர்த்தி செய்யத் தவறியதாகக் கூறியே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜஸ்வர் உமர் அதிக எதிர்ப்பை சந்தித்து வருவதால் அவர் மீதான அவதானமும் அதிகரித்துள்ளது. அதேபோன்று ஜஸ்வர் உமர் இம்முறை தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் குழுவும் தெளிவுபடுத்தி உள்ளன. இது தொடர்பில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய தலைவர் சுரேஷ் சுப்ரமணியமையும் மேற்படி ஒலிம்பிக் குழுக்கள் அறிவுறுத்தியுள்ளன. தற்போது ஐந்து ஆண்டுகள் தடைக்கு உள்ளாகி இருக்கும் முன்னாள் பொதுச் செயலாளருக்கு மாத்திரமே இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று ஆசிய ஒலிம்பிக் குழு பணிப்பாளர் நாயகம் ஹுஸைன் அல் முசாலிம் எழுதிய கடிதத்தில் ஒலிம்பிக் குழு தலைவர் சுப்ரமணியத்தை அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து ஒலிம்பிக் அங்கத்துவ சங்கங்களுக்கு மற்றும் அபேட்சர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன், நியாயமான மற்றும் சமமான வாய்ப்பு உள்ள தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி இருக்கும் ஆசிய ஒலிம்பிக் குழு பணிப்பாளர் நாயகம், தேர்தல் தொடர்பில் ஒருவர் நீதிமன்றம் சென்றாலும், தற்போதைய தேசிய ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுக் குழுவுக்கு பதவிக் காலத்தை நீடிக்க முடியாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஒலிம்பிக் குழு தலைமை பதவிக்கு ஜஸ்வர் உமருடன், தற்போதைய உப தலைவர் மற்றும் இலங்கை தேசிய துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் உப தலைவர் ஷிரன்த பீரிஸ் மற்றும் ஸ்கீ மற்றும் ஸ்னோபோட் சம்மேளனத்தின் தலைவர் தேவா ஹென்றி, பேஸ்போல் சங்கத்தின் தலைவர் அசங்க செனவிரத்ன, கெனொய்ன் மற்றும் காயகின் சங்கத்தின் உறுப்பினர் ரொஹான் பிரீதி விராஜ் பெரேரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை ஒலிம்பிக் குழுவின் செயலாளர் பதவிக்கு இலங்கை நீச்சல் சங்கத்தில் இருந்து பௌமி மொஹமட் ரிப்தி மற்றும் நிஷாந்த பிரியசேன ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேசிய ஒலிம்பிக் குழுவில் பதிவு செய்யப்பட்ட 32 சங்கங்கள் இருந்தபோதும் ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், பொக்சின் மற்றும் கால்பந்து சங்கங்களில் நீடிக்கும் பிரச்சினைக்கு மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 28 இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட நடுவர் கே.டீ. சித்ரசிறி உட்பட தேர்தல் குழு தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களாக ஹர்ஷ அமரசேன மற்றும் பியசேன ரணசிங்க ஆகியோர் செயற்படுகின்றனர். தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பிற்பகல் 4 இற்கு ஒலிம்பிக் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *