இலங்கை கிரிக்கெட் தேசிய ஒப்பந்த வீரர்களுக்கு திருத்தப்பட்ட புதிய ஒழுக்கக் கோவை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. தேசிய அணி தொடர்பில் பொதுமக்களின் பார்வையை மேம்படுத்துவது மற்றும் தொழில்முறைப்படுத்துவதுமே இதன் நோக்கம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இந்த ஒழுக்கக் கோவையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, அனைத்து தேசிய ஒப்பந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட உதவிப் பணியாளர்கள், போட்டி தொடர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணங்களின்போது தமது துணைவருடனான தனிப்பட்ட தொடர்புகளை கட்டுப்படுத்துவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, சமூக ஊடகங்களை பயன்படுத்துவது மற்றும் ஆடை ஒழுங்கு முறைகள் தொடர்பிலும் கண்டிப்பான விதிமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இதில் உள்ளூர் அல்லது சர்வதேச போட்டித் தொடர்களின்போது எந்த ஒரு வீரர் அல்லது பயிற்சியாளரும் முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதனை ஒழுக்க மீறலாகக் கருதி அபராதங்களை விதிக்க அணி முகாமையாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
புதிய ஒழுக்கக் கோவையில் தேசிய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் காதணி அணிவது மற்றும் பச்சை குத்திக்கொள்வதை தவிர்க்க வலியுறுத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு அணிக்குள் தொழில்முறை சூழலை உருவாக்கவும், எதிர்பாராத காயங்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இலங்கை கிரிக்கெட் வளாகத்திற்கு குட்டை காற்சட்டை மற்றும் இறப்பர் செருப்புகளை அணிந்து வருவதற்கும் கட்டுப்பாடு கொண்டுவரப்படவுள்ளது. இது தேசிய அணியின் அமைப்பில் நீண்ட காலமாக தேவைப்பட்ட தொழில்முறை சூழலை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
தேசிய அணி வீரர்களுடனான இலங்கை கிரிக்கெட்டின் ஒப்பந்தம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி காலாவதியான நிலையில் இந்த ஒழுக்கக் கோவை அடங்கிய புதிய ஒப்பந்தம் வீரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



