அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர மாற்று சட்ட வழிகள் ஆராய்வு

2 Min Read

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்டரீதியான தடைகள் காணப்படுவதால், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான மாற்று சட்ட வழிகள் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார

அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டில் வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரையும் மாற்றிக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, அந்நாட்டு பிரஜை ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்றக்கூடிய பல்வேறு சட்ட நடைமுறைகள் உள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதாகவும், அதன் மூலம் பல்வேறு விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, அர்ஜுன மகேந்திரன் தனது சட்டப்பூர்வ பெயரை “ஹர்ஜான் அலெக்சாண்டர்” என மாற்றிக்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) ஊடாக சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில், அரசாங்கத்திற்கு ரூ.10 பில்லியனுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம கடந்த 21ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.மேலும், அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் உரிய நடைமுறைகளுக்கு அமைய பிடியாணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து, அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *