புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால், உப தலைவர் பொறியியலாளர் பியல் ஹென்னாயக்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் காஞ்சன சிறிவர்தன மற்றும் கட்டணங்கள் மற்றும் பொருளாதார விவகாரப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஹசங்க கம்புருகமுவ ஆகியோர் கலந்துகொண்டு புதிய தீர்மானங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டனர்.இலங்கை மின்சாரச் சட்டம் 2024,புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, மின்கலங்களூடான மின் சேமிப்பு கட்டமைப்புக்கான புதிய மின் கொள்முதல், கட்டண வீதங்கள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து உத்தியோகபூர்வ இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.
மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், தேசிய மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் தேவையான திட்டவரைபுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன், இதுகுறித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளும் விளக்கப்பட்டன.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் சந்திரலால்; அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னரே அடிப்படை ஊட்டக் கட்டணங்கள் (Feed-in Tariffs) தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயன்பாட்டு மட்டங்களுக்கு ஏற்ப இக்கட்டணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எல்நினோ (El Niño) காலநிலைத் தாக்கம் காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும். நீர்மின் உற்பத்தியும் குறையலாம்.இருந்த போதிலும், எல்நினோ தாக்கத்தை முன்னிட்டு மின் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை.
புதிய கட்டண நிர்ணயங்களின்படி, சிறிய நீர்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அலகு ஒன்றுக்கு 30.37 ரூபாவும், காற்றாலை மின்சாரத்திற்கு 20.80 ரூபாயும், தரைவழி சூரிய மின் திட்டங்களுக்கு 18.00 ரூபாவும், மிதக்கும் சூரிய மின் திட்டங்களுக்கு 23.58 ரூபாவும் அடிப்படை ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நகரத் திடக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக 41.72 ரூபா மாற்றமில்லாக் கட்டணமாக வழங்க ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.




