பெரும்போக மற்றும் சிறு போக நெற் செய்கையை முன்கூட்டியே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.அந்த வகையில் பெரும் போகத்தை முன்கூட்டியே ஆரம்பித்து, குறிப்பிடத்தக்க நீரையும் சேமித்து அடுத்துவரும் சிறுபோகத்தையும் மார்ச் 15ஆம் திகதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திற்குள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ செயலகப் பணிப்பாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்தால் இரண்டு போகங்களையும் எவ்வித பிரச்சினையுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மகாவலி திட்டத்திற்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது 54 சதவீதமான நீர் கொள்ளளவே காணப்படுகிறது. இது கணிசமான ஒரு மட்டமாகும் என்பதை புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று, வளவை அமைப்பின் நீர் கொள்ளளவு சுமார் 57 சதவீதமாக காணப்படுகிறது.
இந் நிலையில்,ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளபோதிலும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் உலர் வலயத்திற்கு கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்காத நிலைமையே காணப்படும். இதற்கமைய, தற்போதைய நீர்வளங்களை திறம்பட முகாமைத்துவம் செய்து பெரும் போகத்தை முன்பதாகவே ஆரம்பித்து, சிறுபோகத்தையும் குறித்த காலத்திற்கு முன்பதாக ஆரம்பிப்பதன் மூலம் இரண்டு போகங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




