அரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்றும் அது தொடர்பாக எதிர்க்கட்சியினரால் முன் வைக்கப்படும் கூற்று உண்மைக்குப் புறம்பானது என பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நேற்று முன்தினம் இவ்வாறான பொய்யான கூற்று ஒன்று சபையில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் அரசாங்க பாடசாலை அதிபர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பது போன்ற தோரணையில் கருத்துக்களை முன் வைத்துள்ளார். அதிபர்கள் தொடர்பான பிரச்சினையொன்றை அவர் முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் நான் கூற விரும்புவது அவ்வாறான எந்த தீர்மானமும் கிடையாது.
ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாது என்பதில் எந்த உண்மையும் கிடையாது. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அந்த வகையில் அவர்களுக்கான சம்பளம் வழமை போன்று உரிய முறையில் உரிய திகதியில் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ருவன் விஜேவீர எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இடை நடுவில் இந்த விடயத்தை தெரிவித்தார். ரூபன் விஜேவீர எம்பி தமது கேள்வியின் போது, பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கும் போது அடிப்படைக் கல்வித் தகைமைகளுக்கு மேலதிகமாக கல்வியமைச்சினால் வேறு செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்களை கவனத்தில் எடுப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர், நீண்ட காலமாக அதிபர்கள் நியமனம் அதற்கான நியதிகளுக்கு இணங்க முறையாக முன்னெடுக்கப்படவில்லை. அதனால் தான் நாம் அரச சேவை ஆணைக்குழுவுடன் அதனை முறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அத்துடன் பொதுவான கல்வி மறு சீரமைப்பு ஊடாக மனிதவள முகாமைத்துவ அடிப்படையில் தற்போதுள்ள முறைமையை மீளாய்வு செய்து அத்துடன் அனைத்து சுற்றறிக்கைகளையும் மீளாய்வு செய்து குழு ஒன்றின் மூலம் கல்வித் தகமைகளுக்கு மேலதிகமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.




