கலாசாரங்களை பேணும் வகையில் சீருடைகள் அமைய வேண்டும்

1 Min Read

அரச துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சீருடையுடன் தங்கள் மத கலாசாரத்தைப் பேணும் உடைகளை அணியக்கூடிய வகையில், அரசாங்கம் தீர்மானமொன்றை முன்னெடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன்,கல்முனை வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தாதியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதிச்சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தை கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில்,உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தாதியர்கள் மாத்திரமன்றி சுகாதாரத் துறை உள்ளிட்ட ஏனைய அனைத்து துறைகளிலும் சீருடைக்கு மேலதிகமாக அவர்களின் மத கலாசாரத்தை பேணும் வகையில், உடையணிந்து கடமைக்கு வருவதற்கு கொள்கை ரீதியிலான முடிவை அரசாங்கம் எடுத்துவிட்டதென்ற செய்தியையே அரசாங்கத்திடமிருந்து நாம்,எதிர்பார்க்கிறோம்.நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு இதுதான் மூல காரணமாக அமைந்துள்ளது என்பதால், இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்பட வேண்டும். முள்ளை, முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று இந்த பிரச்சினை தொடர்பில் நான் பொது இடமொன்றில் தெரிவித்திருந்தேன்.

அது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நான் இவ்வாறு தெரிவித்தமைக்கு காரணம், இந்த சீருடை பிரச்சினை உள்ளூர் நிர்வாகத்தினால் ஏற்பட்டதாகும். எனவே அந்த உள்ளூர் நிர்வாக முள்ளை எடுப்பதற்கு, அரச மேல்மட்டம் என்ற மற்ற முள்தான், உபயோகப்படுத்தப்பட வேண்டும்.அந்த வகையில், அரச மேல்மட்டத் தலையீடு இந்த விடயத்தில் இருந்திருந்தால், இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்குள்ள ஒரே வழி, சுற்றறிக்கையில் காணப்படும் அந்த விடயத்தை நீக்கிவிடுவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது என்பதை அறிவிப்பதாகும்.
2019ஆம் ஆண்டு சுகாதாரத் துறை சீருடை தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *