நிலவும் அதிக வெப்பமான காலநிலையில், சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக இருப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும் என, சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் எல் நினோ நிலைமை தொடர்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”அதிக வெப்பநிலை காரணமாக தோல் தொடர்பான பிரச்சினைகள், தசைப்பிடிப்பு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். கடுமையான வெப்பத்திற்கு நீண்ட நேரம் உட்படுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் தொற்றா நோய்கள் அல்லது நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகளவில் உள்ளாவர். அதேபோன்று, வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதிக ஆபத்துகள் ஏற்படலாம்.
குறிப்பாக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கடுமையான சூரிய ஒளியில் நேரடியாக இருப்பதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும். அதிக வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படக்கூடும் என்பதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகும். தரமான சூரிய பாதுகாப்பு பூச்சுகளைப் பயன்படுத்துதல், காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துதல், இலகு நிற ஆடைகளை அணிதல் மற்றும் தலையை மூடி பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்.” அவர் அறிவுறுத்தியுள்ளார்.




