இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால்,இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்புகையில்,எதிர்கொள்ள நேரும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கமைவாக செயற்படுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. நிலையியல் கட்டளை 27/2இல் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
சட்ட விரோதமாக நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் கடந்த காலங்களில் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டிருந்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சட்டத்துக்கு அமைவாகவே இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தது.தற்போதைய தீர்மானத்துக்கமைய புதிய திருத்தங்களை முன்னெடுக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வரும்போது எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதற்கமைய செயற்படுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, யுத்த காலத்தின் போது இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புகையில், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.




