2025ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக பெதும் நிஸ்ஸங்க, சமரி அத்தபத்து கௌரவிப்பு

2 Min Read

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் வருடாந்த ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருது விழா 2025’, நேற்று (06) கொழும்பில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

2025ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய 42 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில், இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை’ விருது உட்பட 6 விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

T20 போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை, சிறந்த சகலதுறை வீராங்கனை, ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த சகலதுறை வீராங்கனை ஆகிய நான்கு விருதுகளை வென்ற அவர், கழகங்களுக்கு இடையிலான மகளிர் 50 ஓவர்கள் போட்டித் தொடரின் ‘மிகவும் மதிப்புமிக்க வீராங்கனை’ விருதையும் தட்டிச்சென்றார்.

இதனிடையே, ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்’ விருதை வென்ற பெதும் நிஸ்ஸங்க, ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் T20I போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் ஆகிய இரு விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.

டெஸ்ட் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளராக பிரபாத் ஜயசூரியவும், சிறந்த சகலதுறை வீரராக தனஞ்சய டி சில்வாவும் விருது பெற்றனர். அதேபோல, ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர் விருதை அசித பெனாண்டோ பெற்றுக்கொண்டார்.

சரித் அசலங்க ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரராகத் தேர்வானதுடன், வனிது ஹசரங்க அந்தப் பிரிவின் சிறந்த சகலதுறை வீரராக கௌரவிக்கப்பட்டார்.

துஷ்மந்த சமீர மற்றும் தசுன் ஷானக ஆகியோர் முறையே T20I போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட் பிரிவில் சமரி அத்தபத்துவைத் தவிர, கவிஷா தில்ஹாரி மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் மாத்திரமே விருதுகளைப் பெற்றனர்.

அவர்கள் இருவருக்கும் முறையே T20I போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரராக’ கமில் மிஷாரவும், சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக இமேஷா துலானியும் விருது பெற்றனர்.

இந்த விருது வழங்கும் விழாவில், ஆண்டின் சிறந்த நடுவராக ரவீந்திர கொட்டஹாச்சி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆற்றிய ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டி, மைக்கெல் திசேரா, அனுர தென்னகோன் மற்றும் கெலும் ஸ்ரீமால் ஆகியோருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *