பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

1 Min Read

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பின் நிலைமை குறித்து மீனவர்களுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஊடக அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்பிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். மறு அறிவித்தல் வரைக்கும் இப்பகுதிகளில், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பான முறையில் கரைக்கு திரும்புவது அவசியம்.மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளைத் தவிர நாட்டின் ஏனைய கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றமாகக் காணப்படலாம். இப்பகுதிகளில் மீன்பிடித் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், வானிலை மற்றும் கடலின் சீற்றத்தைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே தொழிலுக்குச் செல்லவும்.

மீனவர்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் திடீர் முடிவாக இது அமைந்த போதிலும், மீனவர்களின் உயிரைப் பாதுகாப்பதும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுமே முதன்மையான நோக்கமாகும்.

எனவே, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்படும் போதும், தொழிலில் ஈடுபடும் போதும், கரைக்குத் திரும்பும் போதும் மீனவர்கள் தவறாது மிதவை அங்கிகளை (Life Jackets) அணியுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *