இலங்கை கிரிக்கெட் புதிய யாப்பு வரைவு ஒன்றை நிறைவு செய்து விளையாட்டுத் துறை அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சீர்திருத்தக் குழு தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் தலைமையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த எரான் விக்ரமரத்ன, புதிய யாப்பு வரைவு தொடர்பில் சீர்திருத்தக் குழுவின் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
‘யாப்பு குறித்து கூறுவதாயின் பலருடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பலரினதும் கருத்துகளை பெற்றிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் இது பற்றி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாம் புதிய யாப்பு வரைவை கொண்டுவந்திருக்கிறோம்.
இலங்கை கிரிக்கெட் சீர்திருத்தக் குழு என்ற வகையில் யாப்பு வரைவை நாம் நிறைவு செய்து ஒப்படைத்திருக்கிறோம். என்றபோதும் புதிய கருத்துகள் வந்தால் அவை அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் வரை பரிசீலிக்க முடியும். ஆனால், எமது வேலையை நாம் நிறைவு செய்திருக்கிறோம்.
இதன் எஞ்சிய பணிகள் அமைச்சரவை ஊடாகவே மேற்கொள்ளப்படும். புதிய யாப்பு எப்போது வரும் என்பது பற்றிய திகதியை எம்மால் குறிப்பிட முடியாது’ என்று விக்ரமரத்ன தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சீர்திருத்தக் குழு கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சந்திப்பு ஒன்றை நடத்திய நிலையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றது. இதில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கிரிக்கெட்டின் முன்னேற்றம், இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற சீர்திருத்தக் குழு உறுப்பினரான சிதத் வெத்தமுனி கூறியதாவ, ‘தற்போது அமைக்கப்பட்டிருக்கும் யாப்பு மிகச் சிறந்த முறையில் உள்ளது.
உலகெங்கும் உள்ள யாப்புகளைப் பார்த்து, அதில் இருந்து கற்று இன்றைக்கு பொருந்தும் வகையில் இந்த புதிய யாப்பு அமைந்துள்ளது’ என்றார்.




